/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரசாயன பரிசோதனை அறிக்கைக்கு காலவரம்பு; உயர்நீதிமன்றம் உத்தரவு
/
ரசாயன பரிசோதனை அறிக்கைக்கு காலவரம்பு; உயர்நீதிமன்றம் உத்தரவு
ரசாயன பரிசோதனை அறிக்கைக்கு காலவரம்பு; உயர்நீதிமன்றம் உத்தரவு
ரசாயன பரிசோதனை அறிக்கைக்கு காலவரம்பு; உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : நவ 20, 2024 07:02 AM

மதுரை : தமிழகம் முழுவதும் அனைத்து வழக்குகளிலும் குறித்த காலவரம்பிற்குள் ரசாயன பரிசோதனை அறிக்கையை கீழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதை உறுதி செய்ய சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கொடைக்கானல் பாம்பார்புரம் மணி. இவரது காரில் ஆக.,17 ல் கொடைக்கானல் போலீசார் சோதனை நடத்தினர்.
அதிலிருந்த 100 கிராம் போதைக் (மேஜிக்) காளானை பறிமுதல் செய்ததாக வழக்கு பதிந்தனர். கைதான மணி உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்: கைப்பற்றப்பட்டது போதைக் காளான்தானா என்பதை உறுதி செய்யாமல் சந்தேகத்தின் பேரில் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு தரப்பு வழக்கறிஞர்: எந்த சட்ட விதிமீறலும் இல்லை. கைப்பற்றப்பட்ட பொருட்கள் கீழமை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. அது ரசாயன பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி: விசாரணை அதிகாரியிடமிருந்து மாதிரியை பெற்ற நாளிலிருந்து விதிகள்படி ரசாயன பரிசோதனை ஆய்வகம் சோதனை முடிவின் அறிக்கையை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 15 நாட்களில், அதிகபட்சம் 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க கடமைப்பட்டுள்ளது.இவ்வழக்கில் ஆகஸ்ட்டில் காளான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை தடய அறிவியல் ஆய்வக அறிக்கை கீழமை நீதிமன்றத்திற்கு வரவில்லை. விதி மீறல் உள்ளது. மனுதாரருக்கு இடைக்கால ஜாமின் அனுமதிக்கப்படுகிறது.விதிகள்படி குறிப்பிட்ட காலவரம்பிற்குள் ரசாயன பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிப்பதை தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலர், சென்னை தடய அறிவியல் ஆய்வக இயக்குனர் உறுதிசெய்ய வேண்டும். காலவரம்பிற்குள் ரசாயன ஆய்வகம் அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறினால், குற்றம் சாட்டப்பட்ட நபர் கீழமை நீதிமன்றத்தில் மனு செய்யலாம். அந்நீதிமன்றம் விரைவாக பரிசோதனை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தும்.
தமிழகம் முழுவதும் அனைத்து வழக்குகளிலும் இந்நடைமுறை பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய சுற்றறிக்கையை வெளியிட வேண்டும். மேலும் உத்தரவு பிறப்பிக்க விசாரணை டிச.9க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.