/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஈரானில் உள்ள உறவினர்களை இந்தியா அழைத்துவர வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
/
ஈரானில் உள்ள உறவினர்களை இந்தியா அழைத்துவர வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ஈரானில் உள்ள உறவினர்களை இந்தியா அழைத்துவர வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ஈரானில் உள்ள உறவினர்களை இந்தியா அழைத்துவர வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : மார் 11, 2026 06:25 AM
மதுரை: ஈரானில் வேலை செய்யும் உறவினர்களை இந்தியா அழைத்துவர நடவடிக்கை கோரிய வழக்கில், 'அங்குள்ள இந்திய துாதரகத்திற்கு விபரங்களை அனுப்ப வேண்டும். அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் பாபின் தாக்கல் செய்த மனு:
எனது சகோதரர் அஸ்வின் ரஞ்சித் குமார். ஈரானிலுள்ள ஒரு மீன்பிடி நிறுவனத்தில் வேலை செய்கிறார். தற்போது ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடுத்துள்ளன. சகோதரரிடம் தொடர்பு கொண்டபோது, 'அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் குண்டுமழை பொழிகின்றன. தான் வசிக்கும் இடம் அருகில் தாக்குதல் நடந்தது. உணவு கிடைக்கவில்லை' என்றார்.
ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, கடலுார் மாவட்டங்களின் 660 மீனவர்கள் ஈரானில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். சகோதரரை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் தரப்பில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுபோல் சத்தியரஸ்மான், 'எனது சகோதரர் சகாய ஜெனிஸ்ராஜ் ஈரானில் வேலை செய்கிறார். அவரை இந்தியாவிற்கு பாதுகாப்பாக அழைத்துவர உத்தரவிட வேண்டும்' என மனு செய்தார்.
நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி விசாரித்தார்.
மத்திய அரசு தரப்பு: ஈரானிலுள்ள இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கையை அங்குள்ள இந்திய துாதரகம் மேற்கொண்டுள்ளது. அங்குள்ள இந்தியர்கள் துாதரகத்தை தொடர்பு கொள்வதற்கான அலைபேசி எண்கள், இ-மெயில் முகவரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவித்தது.
இதைப் பதிவு செய்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் ஈரானிலுள்ள உறவினர்களின் விபரங்களை இந்திய துாதரக இ-மெயிலுக்கு அனுப்ப வேண்டும். அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

