/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காசநோய் மருத்துவமனைக்குரிய நிலத்தில் சிப்காட் அமைக்க தடை உயர்நீதிமன்றம் உத்தரவு
/
காசநோய் மருத்துவமனைக்குரிய நிலத்தில் சிப்காட் அமைக்க தடை உயர்நீதிமன்றம் உத்தரவு
காசநோய் மருத்துவமனைக்குரிய நிலத்தில் சிப்காட் அமைக்க தடை உயர்நீதிமன்றம் உத்தரவு
காசநோய் மருத்துவமனைக்குரிய நிலத்தில் சிப்காட் அமைக்க தடை உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : அக் 26, 2024 05:15 AM
மதுரை: தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அரசு காசநோய் மருத்துவமனைக்குஉரிய நிலத்தை சிப்காட் அமைக்க ஒதுக்கீடு செய்வதற்காக மாற்றம் செய்யக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.
செங்கிபட்டி தேவதாஸ் தாக்கல் செய்த பொதுநல மனு:
திருவையாறு அருகே செங்கிப்பட்டியில் மகாத்மா காந்தி நினைவு காசநோய் மருத்துவமனை 1951ல் தமிழக அரசால் துவக்கப்பட்டது. இதற்கு 488 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. காசநோய் காற்றின் மூலம் பரவும் என்பதால் நகருக்கு வெளியில் மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் இடைவெளிவிட்டு தனித்தனி வார்டுகள் அமைக்கப்பட்டன.
இதை முறையாக பராமரிக்கவில்லை. புதர் மண்டியுள்ளது. குறைந்த டாக்டர்,பணியாளர்கள் உள்ளனர். காசநோயாளிகள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு செல்கின்றனர்.அங்கு நோய் பரவ வாய்ப்புள்ளது.
பாரத் பெட்ரோலிய காஸ் சேமிப்பு கிடங்கு, சிட்கோ, அரசு பொறியியல்கல்லுாரிக்கு நிலம் கையகப்படுத்தியதுபோக மீதம் 220 ஏக்கர் நிலம் உள்ளது.
இதில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனால் மருத்துவமனையின் கட்டடங்கள், மரங்கள் அகற்றப்படும். காசநோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.
சிப்காட் அமைப்பதற்காக 220 ஏக்கர் நிலத்தை மாற்ற தடை விதிக்க வேண்டும். அதை மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும். போதிய டாக்டர்கள், பணியாளர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: மருத்துவமனைக்குரிய நிலத்தை வேறு எந்த நோக்கத்திற்காகவும் மாற்றக்கூடாது என இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
தமிழக தொழில்துறை முதன்மைச் செயலர், சுகாதாரத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.