sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அத்வானி கொலை முயற்சி வழக்கில் தொடர்புடையவரை பிடிக்கச்சென்ற டி.எஸ்.பி., மீது தாக்குதல் ஹனிபாவிற்கு 5 ஆண்டு சிறை விதித்தது உயர்நீதிமன்றம்

/

அத்வானி கொலை முயற்சி வழக்கில் தொடர்புடையவரை பிடிக்கச்சென்ற டி.எஸ்.பி., மீது தாக்குதல் ஹனிபாவிற்கு 5 ஆண்டு சிறை விதித்தது உயர்நீதிமன்றம்

அத்வானி கொலை முயற்சி வழக்கில் தொடர்புடையவரை பிடிக்கச்சென்ற டி.எஸ்.பி., மீது தாக்குதல் ஹனிபாவிற்கு 5 ஆண்டு சிறை விதித்தது உயர்நீதிமன்றம்

அத்வானி கொலை முயற்சி வழக்கில் தொடர்புடையவரை பிடிக்கச்சென்ற டி.எஸ்.பி., மீது தாக்குதல் ஹனிபாவிற்கு 5 ஆண்டு சிறை விதித்தது உயர்நீதிமன்றம்


ADDED : அக் 28, 2025 11:36 PM

Google News

ADDED : அக் 28, 2025 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: பா.ஜ.,மூத்த தலைவர் அத்வானியை குண்டு வைத்து கொலை செய்ய முயன்ற வழக்கில் தலைமறைவான முகமது ஹனிபாவை பிடிக்கச்சென்ற டி.எஸ்.பி.,யை கொலை செய்ய முயன்ற வழக்கில், 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி 2011ல் தமிழகத்தில் ரத யாத்திரை மேற்கொண்டார். யாத்திரை செல்ல இருந்த மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டி பாலத்திற்கு கீழ், சில பயங்கரவாதிகள் பைப் வெடிகுண்டுகளை வைத்து, அத்வானியை கொல்ல முயன்றனர். வெடிகுண்டுகளை போலீசார் அகற்றினர்.

திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்தனர். விசாரணை அதிகாரியாக மதுரை சிறப்பு விசாரணைக் குழுவின் அப்போதைய டி.எஸ்.பி., கார்த்திகேயன் இருந்தார். இவ்வழக்கில் தொடர்புடைய தென்காசியை சேர்ந்த முகமது ஹனிபாவிற்கு எதிராக கீழமை நீதிமன்றம் ஜாமினில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பித்தது. அவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் பதுங்கியிருந்தார்.

வாரன்டை நிறைவேற்ற 2013 ஜூலை 8 ல் டி.எஸ்.பி.,மற்றும் போலீசார் முகமது ஹனிபாவை கைது செய்ய முயன்றார். அப்போது டி.எஸ்.பி., கார்த்திகேயனை கத்தியால் தாக்கி கொலை செய்ய முயற்சித்தது மற்றும் பொது ஊழியர் கடமையை நிறைவேற்றவிடாமல் தடுத்தல், வெவ்வேறு குழுக்களிடையே வெறுப்புணர்வை துாண்டுதல், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், வெடிபொருட்கள் சட்டப்பிரிவுகளின் கீழ் முகமது ஹனிபா மீது வத்தலக்குண்டு போலீசார் வழக்கு பதிந்தனர்.

2 கத்திகள், மின்னணு டெட்டனேட்டர்கள், ஜெல் பைகள், முக்கிய ஹிந்து தலைவர்களின் 'ஹிட் லிஸ்ட்' பட்டியலை கைப்பற்றினர்.

அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் முகமது ஹனிபாவை திண்டுக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றம் 2018 டிச.20 ல் விடுவித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஏற்கனவே விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு: சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டை அரசு தரப்பு நிரூபித்துள்ளது. கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தண்டனை விதிக்கும் முன் முகமது ஹனிபாவிடம் இந்நீதிமன்றம் கேள்வி எழுப்ப விரும்புகிறது. அவர் அக்.28 ல் இந்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் பி.வேல்முருகன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு நேற்று விசாரித்தது. முகமது ஹனிபா ஆஜரானார்.

நீதிபதிகள்: உங்களுக்கு எதிராக திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது தெரியுமா.

முகமது ஹனிபா: அது பொய் வழக்கு.

நீதிபதிகள்: இரு தரப்பிலும் வாதத்தை முன்வைத்துள்ளீர்கள். உண்மையை கண்டறியும் கருவி இல்லை. உங்களுக்கு எதிராக உள்ள ஆவணங்களை ஆய்வு செய்து முடிவிற்கு வந்துள்ளோம். அத்வானியை கொல்ல முயன்ற வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால், உங்களுக்கு எதிராக கீழமை நீதிமன்றம் பிறப்பித்த வாரன்ட் வந்து சேர்ந்ததா.

முகமது ஹனிபா: அவ் வழக்கு பற்றி தெரியாது.

அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார்: அத்வானியை கொல்ல முயன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியை ஐதராபாத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணை நடக்கிறது. வழக்கு நிலுவையில் உள்ளது.

நீதிபதிகள்: டி.எஸ்.பி.,யை கொல்ல முயன்ற வழக்கில் ஆவணங்களை பரிசீலித்ததில் நீங்கள் குற்றம் புரிந்துள்ளீர்கள். உங்களை குற்றவாளி என இந்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

முகமது ஹனிபா: என் மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஏற்கனவே நான்கரை ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளேன். எனக்கு 3 குழந்தைகள் உள்ளனர். குடும்பம் சிரமப்படுகிறது. குடும்ப சூழலை பரிசீலிக்க வேண்டுகிறேன்.

முகமது ஹனிபா தரப்பு வழக்கறிஞர்: முகமது ஹனிபாவை திருநெல்வேலியில் கைது செய்தனர். ஆனால் வத்தலக்குண்டுவில் கைது செய்ததுபோல் பொய் வழக்கு பதிந்துள்ளனர்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: முகமது ஹனிபாவிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.3000 அபராதம் விதிக்கிறோம். அவரை திருநெல்வேலி மத்திய சிறையில் அடைக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us