காரணத்தை தெளிவுபடுத்தாவிடில் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
காரணத்தை தெளிவுபடுத்தாவிடில் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
ADDED : ஜன 10, 2026 04:52 AM

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 'இதற்கு தகுந்த காரணம் தெரிவிக்காத பட்சத்தில், நீதிமன்ற அவமதிப்பு செய்தவர்களுக்கு எதிராக பிப்., 2ல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும்' என, நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
விசாரணையின் போது, 'சேகர்பாபு ஏதும் கூறினாரா' என, கோவில் தரப்பை பார்த்து கேள்வி எழுப்பிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'கல்லத்தி மரத்தில் தர்கா நிர்வாகம் கொடியேற்ற அனுமதித்திருக்கக் கூடாது' எனவும் கருத்து தெரிவித்தார்.
அறிக்கை தாக்கல் மதுரை மாவட்டம், எழுமலை ராம ரவிக்குமார் ஏற்கனவே தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையில், திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடங்களை தவிர, தீபத்துாணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என, டிச., 1ல், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதை கோவில் நிர்வாகம் நிறைவேற்றவில்லை.
ராம ரவிக்குமார், 'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, மனு தாக்கல் செய்தார்.
இதை அவசர வழக்காக டிச., 3ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'உச்சி பிள்ளையார் கோவிலில் மாலை, 6:00 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. தீபத்துாணில் தீபம் ஏற்றவில்லை.
'பிற மனுதாரர்கள் உட்பட 10 பேரை மனுதாரர் அழைத்துச் செல்லலாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை அனுப்ப உயர் நீதிமன்ற சி.ஐ.எஸ்.எப்., கமாண்டன்டிற்கு உத்தரவிடுகிறேன்' என்றார்.
இதை எதிர்த்து, அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, டிச., 4ல் தள்ளுபடி செய்தது.
இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, டிச., 4ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'கார்த்திகை தீபத்தை தீபத்துாணில் ஏற்ற வேண்டும். போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்றார்.
டிச., 9ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தலைமை செயலர், சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ஆகியோர் ஆஜராக உத்தரவிட்டார்.
பின்னர், டிச., 17ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீண்டும் விசாரித்தார். தலைமை செயலர் முருகானந்தம், ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் காணொலியில் ஆஜராகினர்.
கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன், கோவில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் நேரில் ஆஜராகினர்.
அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'இந்நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு தலைமை செயலர் ஆக்கப்பூர்வ நிலைப்பாட்டை எடுப்பார் என எதிர்பார்க்கிறேன்' என, தெரிவித்தார்.
நேற்றும் இவ்வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன், கோவில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் ஆஜராகினர்.
சுய முடிவு தலைமை செயலர் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி, 'பி.என்.எஸ்.எஸ்., சட்டப்பிரிவு 163ன் கீழ், மலைக்குச் செல்ல 144 தடை உத்தரவை நீங்களாக பிறப்பித்தீர்களா அல்லது வேறு யாரும் அறிவுத்தினார்களா?' என, கேள்வி எழுப்பினார்.
கலெக்டர், 'கள நிலவரம், போலீசாரின் அறிக்கை அடிப்படையில் சுயமாக முடிவெடுத்து தடை உத்தரவு பிறப்பித்தேன்' என்றார்.
நீதிபதி, 'தடை உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்த பின்னும், தீபம் ஏற்ற வந்தவர்களை ஏன் தடுத்தீர்கள். வேறு யாரும் அறிவுறுத்தினார்களா?' என, மீண்டும் கேள்வி எழுப்பினார்.
இனிகோ திவ்யன், 'சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்தினேன். சுய முடிவு அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டேன்' என, பதிலளித்தார்.
உடனே, நீதிபதி, கோவில் தரப்பை நோக்கி, 'நீங்களாக செயல்பட்டீர்களா அல்லது சேகர்பாபு எதுவும் கூறினாரா? தர்கா சந்தனக்கூடு விழாவின் போது, கோவிலுக்கு சொந்தமான கல்லத்தி மரத்தில் கொடியேற்ற அனுமதித்திருக்க கூடாது.
'தீபத்துாண் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுக்கவில்லை. அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய வேண்டிய சூழல் வரும்' என்றார்.
அரசு தரப்பு, 'பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை. பதில் மனுவில் நீதிமன்றத்திற்கு திருப்தி இல்லாதபட்சத்தில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து உத்தரவு பிறப்பிக்கலாம்' என, விவாதம் நடந்தது.
பின், நீதிபதி குறிப்பிட்டதாவது:
நீதிமன்ற அவமதிப்பு செய்த அதிகாரிகளுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்கள் மீது ஏன் அவமதிப்பு நடவடிக்கைகளை துவங்கக்கூடாது என்பதற்கு விளக்கம் கோரியும், தற்போது வரை அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.
அரசு தரப்பு, 'அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை, இரு நீதிபதிகள் அமர்வால் இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. மேலும் கால அவகாசம் தேவை' என, தெரிவித்தது.
அத்துமீறிய செயல் இந்நீதிமன்றம், டிச., 1ல் தீபத்துாணில் தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை கோவில் அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. நீதிமன்ற உத்தரவை தோற்கடிக்கும் நோக்கில், கலெக்டர் பி.என்.எஸ்.எஸ்., சட்டப்பிரிவு 163ன் கீழ் 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.
அதை இந்நீதிமன்றம் ரத்து செய்தது. இச்சூழலில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதை இனிகோ திவ்யன் தடுத்தார். தகுந்த காரணம் தெரிவிக்காத பட்சத்தில், நீதிமன்ற அவமதிப்பு செய்தவர்களுக்கு எதிராக பிப்., 2ல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும்.
இந்நீதிமன்றம், டிச., 1ல் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அரசு மேல்முறையீடு செய்தது. டிச., 1ல் பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு ஜன., 6ல் உறுதி செய்தது. மலை உச்சியிலுள்ள தீபத்துாண் பகுதி கோவிலுக்கு சொந்தமானது என, இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
ஆனால், சந்தனக்கூடு திருவிழா தொடர்பாக, தர்கா நிர்வாகிகள் தீபத்துாண் பகுதியிலுள்ள கல்லத்தி மரத்தில், பள்ளிவாசலின் கொடியை கட்டினர். அவ்வாறு செய்வதற்கு முன், கோவில் அதிகாரிகளிடம் அனுமதி பெறப்படவில்லை என, செயல் அலுவலர் கூறுகிறார்.
தர்கா அலுவலர்களின் செயல் அப்பட்டமான அத்துமீறிய குற்றச்செயல் என்பதை கோவில் செயல் அலுவலர் ஒப்புக்கொண்டார்.
கோவிலுக்கு சொந்தமான சொத்தில், தர்கா நிர்வாகத்தினர் அத்துமீறி நுழைந்ததால், சம்பந்தப்பட்ட போலீசில் உடனடியாக புகார் அளிக்கப்படும் என, அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக, முறையான குற்றவியல் வழக்கு தொடர சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும் என, அவர் உறுதியளித்தார். இது கோவில் தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் முன்னிலையில் அளிக்கப்பட்டது.
கலெக்டர் மற்றும் போலீஸ் துணை கமிஷனர் முழுமையாக தாங்களாகவே செயல்பட்டதாகவும், யாருடைய உத்தரவிலும் செயல்படவில்லை எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். விசாரணை பிப்., 2க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டார்.

