/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வீட்டு வரி விதிப்பு: கலெக்டர் மின்னல் வேக நடவடிக்கை: தினமலர் செய்தியால் கிடைத்தது தீர்வு
/
வீட்டு வரி விதிப்பு: கலெக்டர் மின்னல் வேக நடவடிக்கை: தினமலர் செய்தியால் கிடைத்தது தீர்வு
வீட்டு வரி விதிப்பு: கலெக்டர் மின்னல் வேக நடவடிக்கை: தினமலர் செய்தியால் கிடைத்தது தீர்வு
வீட்டு வரி விதிப்பு: கலெக்டர் மின்னல் வேக நடவடிக்கை: தினமலர் செய்தியால் கிடைத்தது தீர்வு
ADDED : ஜூலை 01, 2025 02:55 AM
மதுரை: கிராமங்களில் 'சாப்ட்வேர்' பிரச்னையால் புதிய வீடுகளுக்கு வரிவிதிக்க முடியாமல் ஊராட்சி செயலாளர்கள் பொதுமக்களுடன் மல்லுக்கட்டிய பிரச்னைக்கு, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து மதுரை கலெக்டர் பிரவீன்குமார் மின்னல்வேக நடவடிக்கையால் தீர்வு கண்டார்.
ஊராட்சிகளின் வருவாய் வீட்டுவரி, சொத்துவரி, தண்ணீர் வரி என்பன போன்றவற்றை வசூலிப்பது மூலம் அரசுக்கு கிடைக்கிறது. கிராமங்களில் உள்ள வீடுகள், கடைகள் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வரிவசூலிப்பு செய்கின்றனர். புதிய வீடுகள் கட்டுவோர் அதனை வரிவிதிப்புக்கு உட்படுத்த ஊராட்சிகளில் பதிவு செய்ய வேண்டும்.
கடந்த ஏப்ரல் முதல் வீடு, கட்டடங்களை கட்டுவோர் அவற்றுக்கு வரிவிதிப்புக்கு பதிவு செய்ய விண்ணப்பித்தாலும், சாப்ட்வேர் பிரச்னையால் அதனை செயல்படுத்த முடியவில்லை. அதேசமயம் ஏற்கனவே பதிவு செய்த வீடுகளுக்கு சொத்துவரி, வீட்டுவரி வசூலிப்பு நடந்தது. இதனை அறியாத பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகம் வேண்டுமென்றே தங்களிடம் விண்ணப்பம் பெற மறுப்பதாக கருதி தகராறில் ஈடுபட்டனர். இதனால் தினமும் வாக்குவாதம், மோதல் ஏற்பட்டு வந்தது.
மின்னல் வேக நடவடிக்கை
இப்பிரச்னை மதுரை மாவட்டத்தில் 420 கிராமங்களில் உள்ளது என ஜூன் 26 ல் 'கிராம பஞ்சாயத்து' என்ற தலைப்பில் செய்தியாக வெளியானது. இதையடுத்து மதுரை கலெக்டர் பிரவீன்குமார் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். தினமலர் செய்தியை அதிகாரிகளின் வாட்ஸ் ஆப் குழுவில் பகிர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உள்ளாட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மின்னல் வேகத்தில் செயல்பட்ட அதிகாரிகள் இப்பிரச்னை மாநிலம் முழுமைக்குமாக உள்ளது என அறிந்து உடனே சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சாப்ட் வேர் பிரச்னைக்கு தீர்வு கண்டனர். மறுநாளே புதிய வீடுகளுக்கு 4 மாதங்களாக விண்ணப்பித்தோருக்கும் பதிவு நடவடிக்கை துவங்கியது.
ஊராட்சி செயலர்கள் கூறுகையில், 'தினமலர் செய்தியால் உடனடி நடவடிக்கை கிடைத்தது மகிழ்ச்சி. அதேபோல பழைய வீடுகள் பல வணிக கட்டடங்களாக மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றை திருத்தம் செய்வதற்கும் தடை இருந்தது. அதற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. அந்தப் பிரச்னைக்கும் கலெக்டர் உடனடியாக தீர்வு காண வேண்டும்'' என்றனர்.