/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கர்ப்ப கால சர்க்கரை நோயை எதிர்கொள்வது எப்படி
/
கர்ப்ப கால சர்க்கரை நோயை எதிர்கொள்வது எப்படி
ADDED : செப் 21, 2025 05:33 AM
க ர்ப்ப கால சர்க்கரை நோய் என்பது கர்ப்ப காலத்தில் ஏற்படும் அல்லது கண்டுபிடிக்கப்படும் சர்க்கரை நோய். உலகளவில் 2வது வகை சர்க்கரை நோய் 4 கோடி மக்களை பாதிக்கிறது. அன்றைய காலங்களில் 40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தான் டைப்- 2 சர்க்கரை நோய் வரும். ஆனால் இப்பொழுது 20 வயதிலேயே வந்துவிடுகிறது.
கர்ப்ப கால சர்க்கரை நோய் கண்டறிய 75 கிராம் குளுக்கோஸ் சாப்பிட்டு, 2 மணி நேரம் கழித்து சர்க்கரை நோய் பரிசோதனை செய்ய வேண்டும். அதில் சர்க்கரையின் அளவு 140 விட அதிகமாக இருந்தால் அந்த நபர் கர்ப்ப கால சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என அறியலாம்.
நோயிற்கான காரணம் வாழ்க்கை முறை மாற்றம், நேரத்திற்கு சாப்பிடாதது, உடற்பயிற்சி இல்லாதது, ரத்த கொதிப்பை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாதது போன்ற பல்வேறு காரணங்களால் கர்ப்ப கால சர்க்கரை நோய் ஏற்படுகிறது. பிறக்கும் போது குழந்தையின் எடை 4 கிலோவிற்கு அதிகமாக இருக்கும். குழந்தைக்கு சர்க்கரையின் அளவு குறைந்த நிலைமை, சுவாசக் கோளாறுகள், பிறவி குறைபாடு ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம்.
வராமல் தடுப்பது எப்படி உடல் பருமன் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் 5 கி.மீ. ஆவது நடக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் மருத்துவரோடு ஆலோசனை செய்து அதற்கேற்ற உடற்பயிற்சி செய்யலாம்.
எண்ணெயில் பொரித்த உணவுகள், பாஸ்ட்புட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வாரம் இருமுறை சிக்கன் அல்லது மீன் குழம்பு எடுத்துக்கொள்ளலாம். பழங்களில் மா, பலா, வாழை, சப்போட்டா தவிர்த்தல் நல்லது. காய்கறிகளில் உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பீட்ரூட் தவிர்க்க வேண்டும். பழச்சாறு குடிக்கும்போது சர்க்கரை அளவு அதிகரிப்பதால் அதனை தவிர்ப்பது நல்லது. கருப்பட்டி, வெல்லம், சீனி, வனஸ்பதி, ஐஸ்கிரீம், இனிப்பு கிரீம், பேரீச்சம்பழம், குளிர்பானங்கள், தேன், எண்ணெய்யில் பொரித்த வடை, சமோசா, பஜ்ஜி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
பிரசவம் முடிந்து ஒரு வாரம் கழித்து சர்க்கரை பரிசோதனை செய்ய வேண்டும். சர்க்கரையின் அளவு சரியாக இல்லையென்றால் சர்க்கரை நோய்க்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
ஏறக்குறைய 25 சதவீதம் பேர் பிரசவ காலத்திற்கு பின்பும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளை விட மிகச்சிறந்தது இன்சுலின் தான். எனவே கர்ப்ப கால சர்க்கரை நோய்க்கு இன்சுலின் பயன்படுத்த வேண்டும். எத்தனை யூனிட்டுகள் என்பதை மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுதல் அவசியம்.
-- டாக்டர் சங்குமணி
சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ நிபுணர், மதுரை
sangudr@yahoo.co.in