ADDED : அக் 16, 2024 05:05 AM
மதுரை : தொடர் மழையில் இருந்து நெற்பயிர்களை காப்பது குறித்து மதுரை வேளாண் துணை இயக்குநர் அமுதன் கூறியதாவது:
வயலில் தேங்கிய மழைநீரை வடியச் செய்ய வேண்டும். வடிகால் வசதி முறையாக இருந்தால் தண்ணீர் தேங்குவதும், பயிர் அழுகுவதும் குறையும். நெல் நாற்று நட்டு 15 - 20 நாள் பயிராக இருந்தால் தண்ணீரை வடியவிட்டு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சத்துடன் 4 கிலோ வேப்பம்புண்ணாக்கு கலந்து 24 மணி நேரம் வைக்க வேண்டும். மறுநாள் காலையில் இதனுடன் 17 கிலோ பொட்டாஷ் கலந்து வயலில் தெளித்தால் பயிர்களுக்கு ஊட்டச்சத்து கிடைத்து வளர்ச்சி உடனே கிடைக்கும்.
30 - 35 நாள் பயிராக இருந்தால் பாதி தண்ணீரில் மூழ்கிய நிலையில் பயிர் மஞ்சள் நிறமாக மாற வாய்ப்புள்ளது. இதனால் ஜிங்க், நைட்ரஜன் பற்றாக்குறை ஏற்படும். இதற்கு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ யூரியா, ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் கலந்து கைத்தெளிப்பான் மூலம் பயிர்களின் மீது தெளிக்க வேண்டும். மேல் உரம் இடுவதை தவிர்க்க வேண்டும்.
பூக்கும் தருணத்தில் இருந்தால் 20 லிட்டர் தண்ணீரில் 4 கிலோ டி.ஏ.பி. கலந்து மறுநாள் வடிகட்ட வேண்டும்.
இதனுடன் 180 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ பொட்டாஷ் கலந்து மாலை நேரத்தில் இலைகளின் மீது கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும் என்றார்.