ADDED : பிப் 10, 2025 04:47 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் நீண்ட காலத்திற்குப்பின் தொடர்ந்து நீர்மட்டம் குறையாமல் கண்மாய்கள் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உசிலம்பட்டி பகுதியின் பெரும்பாலான கிராமங்கள் வானம்பார்த்த பூமியாகவே இருந்துள்ளன. மழைக்காலத்தில் ஓரளவு நிரம்பும் கண்மாய்கள், அடுத்த சில வாரங்களில் வற்றிப் போகும். இதனால் மானாவாரி விவசாயம் மட்டுமே நடந்து வந்தது. ஊர் விரிவாக்கம் காரணமாக பல இடங்களில் போர்வெல்கள் அமைத்ததால் நிலத்தடி நீர்மட்டமும் 800 அடிக்கும் கீழாகச் சென்றது.
மூன்று ஆண்டுகளாக 58 கிராம கால்வாய் மூலம் வைகை அணையில் இருந்து இந்தப்பகுதி கண்மாய்களுக்கு நீர் கிடைத்ததால் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. சென்ற ஆண்டு கால்வாயில் தண்ணீர் தருவதற்கான சூழல் பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயராததால் கிடைக்காமல் போனது.
இருந்த போதும் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில் கிடைத்த மழைநீரால் மாதரை, கருக்கட்டான்பட்டி, உசிலம்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, கீரிபட்டி கண்மாய்கள் ஓடைகளின் வழியாக கிடைத்த ஊற்று நீரால் நிரம்பின. மழைப்பொழிவு கிடைத்து ஒரு மாதத்திற்கும் மேலான நிலையில் தொடர்ந்து கண்மாய்கள் நிரம்பிய நிலையில் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

