/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொட்டி கட்டியாச்சு; தண்ணீர் என்னாச்சு
/
தொட்டி கட்டியாச்சு; தண்ணீர் என்னாச்சு
ADDED : ஜூலை 08, 2025 01:38 AM

மேலுார்: அம்பலக்காரன்பட்டியில் மேல்நிலை தொட்டி கட்டும் பணிகள் முடிந்தும் பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப் பொருளாக உள்ளதால் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது.
இவ்வூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள பெரியகுளம் கண்மாயில் போர்வெல் அமைத்து ஊருக்குள் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. தண்ணீர் பருக உகந்ததாக இல்லாமல் அதிக உவர்ப்பு தன்மையுடன் இருப்பதால் மக்கள் தொற்று நோய்களுக்கு ஆளாகும் நிவை ஏற்பட்டது.
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 8 மாதங்களுக்கு முன் வீடுகளில் பதித்த குழாய்களிலும் தண்ணீர் வரவில்லை. அதனால் ஒரு கேன் தண்ணீரை ரூ. 12க்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால், ஊரக குடியிருப்பு கூட்டு குடிநீர் திட்டத்தில் ரூ.11 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி கட்டி முடித்தனர்.
அது பயன்பாட்டுக்கு வராததால் பல மாதங்களாக காட்சிப் பொருளாக மாறிவிட்டது.
அதிகாரிகள் மேல்நிலைத் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. காவிரி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் கூறுகையில், ''குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. முடிந்ததும் தண்ணீர் விநியோகிக்கப்படும் என்றனர்.