/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டங்ஸ்டன் திட்டம் வராது என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன்
/
டங்ஸ்டன் திட்டம் வராது என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன்
டங்ஸ்டன் திட்டம் வராது என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன்
டங்ஸ்டன் திட்டம் வராது என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன்
ADDED : ஜன 11, 2025 05:16 AM

மேலூர் :   4979 ஏக்கரில் டங்ஸ்டன் திட்டம் வராது என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன் என மதுரை மாவட்டம் மேலுார் அருகே அ.வள்ளாளபட்டியில் கிராமத்தினரை சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உறுதி தெரிவித்தார்.
கிராம மக்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது: மாநில அரசு எதிர்ப்பு தெரிவிக்காததால் டங்ஸ்டன் சுரங்க ஏலம் விடப்பட்டது.
மத்திய அரசுக்கு இத்திட்டத்தால் ரூ.ஒன்று கூட வருவாய் கிடையாது. மாநில அரசுக்கு தான் வருவாய் கிடைக்கும். மத்திய அரசுக்கு ஏலம் கொடுக்கும் அதிகாரம் மட்டுமே உண்டு. இப்பகுதியில் 4979 ஏக்கரில் எங்குமே டங்ஸ்டன் திட்டம் வராது என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன். இதற்கான அறிவிப்பை ஜன., 17 - 19 தேதிகளுக்குள் சென்னை வரும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி இப்பகுதியை சேர்ந்த கிராம முக்கியஸ்தர்களிடம் அறிவிப்பார்.
மத்திய அமைச்சர் வர முடியாவிட்டால் கிராம முக்கியஸ்தர்களை டில்லி அழைத்து சென்று மத்திய அமைச்சரை நேரில் சந்திக்க வைத்து அமைச்சர் மூலம் திட்டம் வராது என  அறிவிக்க செய்யவுள்ளேன்.
மக்கள் மீது பதிவான வழக்கை உடனடியாக தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். வரும் காலங்களில் 4979 ஏக்கர் தவிர்த்து வேறு கிராமங்களில் சுரங்க துறை ஏலம் வந்தால் அதற்குரிய சரியான பதிலை மாநில அரசு அளிக்க வேண்டும். அப்போதுதான் குழப்பம் வராமல் தடுக்கலாம்.
மாநில அரசு எழுதிய கடிதத்தின் அடிப்படையில்தான் மத்திய அரசு செயல்பட்டது
2024 பிப்., 8 மாநில அரசு எழுதிய கடிதத்தில் 477 ஏக்கர் பல்லுயிர் தளம் தவிர்த்து என குறிப்பிட்டதால்தான் மறு வரையறை செய்ய மத்திய அரசு திட்டமிட்டது.
பல்லுயிர் தளம் தவிர்த்து பிற பகுதிகள் முல்லைப்பெரியாறு பாசனப்பகுதி என்பதால் இப்பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நாங்களும் ஆதரிக்கிறோம்.
2023 ஆக., 17 முன்பு வரை மாநில அரசு கையில் தான் ஏலம் விடும் அதிகாரம் இருந்தது.
அதற்கு பிறகுதான் மத்திய அரசு திருத்தம் செய்தது. 2021 செப்.,14 மாநில அரசு கொடுத்த ஜியாலஜிக்கல் சர்வே அடிப்படையில் தான் மத்திய அரசு ஏலம் விட்டது. இப்பிரச்னையால் மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாமல் தவிப்பார்கள் என்பதால் இத்திட்டம் வராது என்பதை நேரில் சொல்வதற்காக வந்துள்ளேன். எனவே போராட்டத்தை கைவிடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

