ADDED : பிப் 16, 2025 05:37 AM
மதுரை : மதுரையில் சின்னம்மையின் (சிக்கன்பாக்ஸ்) தாக்கம் துவங்கியுள்ளது.
கிராமப்புறங்களில் ஆங்காங்கே தலை காட்டி வரும் சின்னம்மைக்கு உசிலம்பட்டியில் 3 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். நகர்ப்பகுதிகளில் நோய் தாக்கியோர் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். மதுரை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தோப்பூர் காசநோய் மருத்துவமனையின் சிறப்பு வார்டுக்கு செல்ல பரிந்துரைக்கப்படுகின்றனர்.
பிப். 1 முதல் 15 வரை தோப்பூரில் 2 குழந்தைகள் உட்பட 9 பேர் சின்னம்மை, பொண்ணுக்கு வீங்கி (மம்ஸ்), நரம்பைத் தாக்கும் அம்மைத்தொற்று (ெஹர்பிஸ்) பாதிப்பிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றும் 2 குழந்தைகள் சின்னம்மை, மம்ஸ் பாதிப்பிற்கு அனுமதிக்கப்பட்டனர். 6 பேர் சிகிச்சையில் உள்ளனர். இங்கு 30 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு உள்ளது.
டாக்டர்கள் கூறியதாவது: வெயில் அதிகரிக்கும் போது மார்ச், ஏப்ரலில் அம்மையின் தாக்கம் அதிகரிக்கும். தற்போது மிதமாக பரவி வருகிறது. நோய் பாதித்தவர்கள் நோயின் தீவிரத்தைப் பொறுத்து 7 முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் அவசியம். ஒருமுறை சின்னம்மை நோய் வந்தால் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடுத்த 20 ஆண்டுகளுக்கு நோய் வராது. ஆனால் குழந்தைகள், வயதானவர்கள் காய்ச்சல், உடல் வலியால் அதிகம் பாதிக்கப்படுவர்.
தேர்வு நேரத்தில் மாணவர்கள் பாதிக்கப்படாமல் தவிர்க்க வேண்டுமெனில் கூட்டம் அதிகமான இடங்களுக்கு செல்லக்கூடாது. உடலை குளிர்ச்சியாக்கக்கூடிய பழங்கள், காய்கறிகளை சாப்பிட வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றனர்.

