ADDED : ஆக 13, 2026 06:11 PM
அலங்காநல்லுார்: தனிச்சியம் ஊராட்சியில் கழிவுநீர் வடிகாலில் தொடர்ந்து மண் கொட்டுவதால் கழிவுநீர் தேங்கி சுகாதாரம் பாதிக்கிறது.
இங்குள்ள மார்நாடு நகர் முதல் தெருவில் வீடுகளில் இருந்து வெளியேற 2024 ல் வடிகால் கட்டப்பட்டது. இத்தெருவில் 90 சதவீதம் சிமென்ட் ரோடு, எஞ்சிய பகுதி மண் ரோடாக உள்ளது. வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி வடிகாலில் செல்ல வேண்டும். சிமென்ட் ரோட்டில் உள்ள வடிகாலில் சிலர் மண் மூடைகள், கற்கள், மண்ணைக் கொட்டி அடைத்துள்ளனர்.
இதனால் கழிவுநீர் வெளியேற முடியாமல் வீடுகளின் முன் தேங்கியது. கடந்த நவம்பரில் இது பற்றி தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. ஒன்றிய அதிகாரிகள் மண்ணை அகற்றி கழிவுநீர் செல்ல வழி செய்தனர்.
தற்போது மீண்டும் மண்ணைக் கொட்டி அடைத்ததால் வீடுகள் முன் கழிவு நீர் தேங்கியது. ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. வீடுகள் முன் இருந்த வடிகாலை பலர் மண்ணைக் கொட்டியே மூடி விட்டனர். இதனால் தேங்கும் கழிவு நீரால் சுகாதாரம் பாதிக்கிறது.
தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. வடிகாலில் மண்ணைக் கொட்டுவோர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதியினரின் எதிர்பார்ப்பு.
