/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரேஷன் கடைகளில் பொருள் ஒன்று: எடை இரண்டு; கூட்டுறவுத்துறையில் விற்பனையாளர்கள் 'ஐடியா'
/
ரேஷன் கடைகளில் பொருள் ஒன்று: எடை இரண்டு; கூட்டுறவுத்துறையில் விற்பனையாளர்கள் 'ஐடியா'
ரேஷன் கடைகளில் பொருள் ஒன்று: எடை இரண்டு; கூட்டுறவுத்துறையில் விற்பனையாளர்கள் 'ஐடியா'
ரேஷன் கடைகளில் பொருள் ஒன்று: எடை இரண்டு; கூட்டுறவுத்துறையில் விற்பனையாளர்கள் 'ஐடியா'
ADDED : ஜூலை 09, 2025 06:40 AM

மதுரை : கூட்டுறவுத் துறையின் கீழ் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவோருக்கு, சரியான எடையில் கணக்கு காட்டுவதற்காக மின்னணு தராசில் ஒரு முறையும், வழக்கம் போல சாதாரண தராசில் ஒருமுறையுமாக இரண்டு முறை எடையிடப்படுகிறது. ஆனால் எடை குறைவான பொருட்களே வழங்கப்படுகிறது.
நுகர்வோருக்கு சரியான எடையில் அரிசி, பருப்பு, சீனி, கோதுமை கிடைப்பதில்லை என்ற புகாரை அடுத்து ரேஷன் கடைகளுக்கு மின்னணு தராசு வழங்கப்பட்டது. இந்த மின்னணு தராசு நுகர்பொருள் வாணிப கழகத்துடன் (டி.எஸ்.சி.எஸ்.சி.,) இணைக்கப்பட்டு செயல்படுகிறது. நுகர்வோருக்கான விரல்ரேகை பதியப்பட்டவுடன் அவர்களுக்கான புழுங்கல் அரிசி, பச்சரிசி, பருப்பு, சீனி, கோதுமை என ஒவ்வொன்றையும் துல்லியமான எடையில் மின்னணு தராசில் வைத்தால் மட்டுமே பாயின்ட் ஆப் சேல்ஸ் (பி.ஓ.எஸ்.,) இயந்திரம் பதிவு செய்யும். இதன் படி ஒரு நுகர்வோருக்கு எடையிடுவதற்கு அதிகபட்சமாக 10 நிமிடங்களாகிறது.
நுகர்வோருக்கு தாமதம் என்பதைத் தாண்டி ரேஷன் கடைகளுக்கு டி.எஸ்.சி.எஸ்.சி., சரியான எடையில் பொருட்களை வழங்குவதில்லை என விற்பனையாளர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் 50 கிலோ எடைக்கு பதிலாக 46 அல்லது 47 கிலோ அளவிலேயே மூடைகள் வழங்கப்படுவதால் ரேஷன் கடை விற்பனையாளர்களும் எடை குறைவை தவிர்க்க புதிய ஐடியாவை பயன்படுத்துகின்றனர்.
கணக்குக்கு மின்னணு தராசு
மிகத்துல்லியமான எடையில் பத்து கிலோ அரிசி, 5 கிலோ அரிசி, ஒரு கிலோ சீனி, ஒரு கிலோ பருப்பு, 2 கிலோ பச்சரிசி, 2 கிலோ கோதுமை என ஏற்கனவே 'பேக்கிங்' செய்து வைத்து விடுகின்றனர். அந்த 'பேக்கிங்' பொருட்களை ஒவ்வொரு கார்டுதாரருக்கும் வைத்து சரியான அளவில் எடையிட்டதாக கணக்கு காட்டுகின்றனர். ஆனால் வழக்கம் போல ரேஷன் கடையில் வைத்திருக்கும் தராசில் தான் கார்டுதாரர்களுக்கு குறைந்த எடையில் பொருட்களை விநியோகம் செய்கின்றனர். கூட்டுறவுத்துறையின் மூலம் சரியான எடை அளவில் நுகர்வோருக்கு பொருட்கள் கிடைக்க வேண்டுமென தமிழக அரசு நினைத்தால் மட்டும் போதாது.
நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து சரியான எடையில் மூடைகள், ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.