ADDED : டிச 01, 2024 01:52 AM
பஞ்சு வரத்து அதிகரிப்பு
திருப்பூர், டிச. ௧-
நடப்பு பருத்தி ஆண்டு (2024அக்., - 2025 செப்.,) கடந்த மாதம் துவங்கியது. கடந்த சீசனில், கடைசி நேரம் வரை பருத்தி வரத்து இருந்து வந்தது. கடந்த மாதம் முதல் வாரத்தில், தினசரி பஞ்சு வரத்து, 12 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேல்களாக இருந்தது. (ஒரு பேல் என்பது, 170 கிலோ).
கடந்த மாத இறுதியில், தினசரி வரத்து, ஒரு லட்சம் பேல்களை தாண்டியது. தொடர்ந்து பஞ்சு வரத்து அதிகரித்து வருவதால், தினசரி வரத்து இரண்டு லட்சம் பேல்களை கடந்துவிட்டது. தமிழகத்தை சேர்ந்த சில நுாற்பாலைகள், பஞ்சு விலை குறைவாக இருக்கும் நிலையில், முதலில் வரும் தரமான பஞ்சை வாங்கி, 25 சதவீதம் இருப்பு வைக்க உத்தேசித்துள்ளன.
முதல்கட்டமாக, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து அதிக வரத்து துவங்கியுள்ளது. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் தமிழகத்தில் இருந்து வரத்து மிகவும் குறைவாக இருக்கிறது.
இதுகுறித்து பஞ்சு வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த ஆண்டுகளை காட்டிலும் பருத்தி சாகுபடி குறைந்துள்ளது. அடுத்த மாதத்தில் இருந்து மூன்று மாதங்களுக்கு பஞ்சு வரத்து அதிகமாக இருக்கும்' என்றனர்.

