/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கிராமப்புறங்களில் வாங்கும் சக்தி அதிகரிப்பு; தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன்
/
கிராமப்புறங்களில் வாங்கும் சக்தி அதிகரிப்பு; தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன்
கிராமப்புறங்களில் வாங்கும் சக்தி அதிகரிப்பு; தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன்
கிராமப்புறங்களில் வாங்கும் சக்தி அதிகரிப்பு; தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன்
ADDED : நவ 16, 2025 04:27 AM

மதுரை: மத்திய அரசின் பிரதமர் கிசான் சம்மான் நிதி, குறைந்தபட்ச ஆதார விலை போன்றவை கிராமப்புறங்களில் வாங்கும் சக்தியை அதிகரிக்கின்றன. அரசின் வரிக்குறைப்பு நடவடிக்கைகள், வரிச்சலுகைகளும் பணவீக்கத்தை குறைக்க முக்கிய பங்கு வகிக்கின்றன, என்கிறார் மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன்.
நமது நிருபருக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:
டிஜிட்டல் பொருளாதாரத்தின் அடுத்த கட்டமாக நீங்கள் நினைப்பது
டிஜிட்டலில் கட்டண பரிவர்த்தனை, நிதி பரிமாற்றம், சில்லறை வர்த்தகம் பயன்படுத்தி வருகிறோம். இனிவரும் காலங்களில் டிஜிட்டலில் விவசாயம், எரிசக்தி, மருத்துவம் போன்ற துறைகள் முக்கியமானவையாக இருக்கும்; இந்த மூன்று துறைகளும் இரண்டு ஆண்டுகளாக பட்ஜெட் கோப்புகளிலும் இடம்பெற்றதை வைத்தே இவற்றின் முக்கியத்துவத்தை உணரலாம். எரிசக்தி துறையை மேம்படுத்த டிஜிட்டலை கையில் எடுப்பது அவசியம்.
வளர்ச்சி மிகவும் பரந்த அளவில் மாறி வருவதாக நீங்கள் சமீபத்தில் சொன்னீர்கள். பொருளாதாரத்தின் எந்தப் பகுதிகள் இப்போது அதை இயக்குகின்றன
வளர்ச்சி விகிதம் குறிப்பிட்ட துறை மட்டும் இல்லாமல் மிகவும் பன்முகத்தன்மை வாய்ந்ததாக இருக்கும். ராபி பயிர்களின் விதைப்பு வலுவாக உள்ளதால் பருவ மழைக்கு பிறகு விவசாயத்துறை வளர்ச்சி அதிகரித்து கிராமப்புற நுகர்வு மீட்சிக்கு வழிவகுக்கும். ஜி.எஸ்.டி., விகிதக் குறைப்பு, பிப்ரவரி பட்ஜெட்டில் வந்த நேரடி வரிக்குறைப்பு போன்றவை மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து கார்ப்பரேட், வர்த்தகத்துறைகளின் திறனை மேம்படுத்த உதவும்.
சீனாவின் பொருளாதார மந்த நிலை, உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் வாய்ப்பை பிரகாசப்படுத்துமா
நேரடித் தொடர்பு கிடையாது. இந்தியா போன்ற பன்முகத்தன்மையும், அதிக மக்கள் தொகையும் கொண்ட நாட்டில் வெறும் ஒரு சீர்த்திருத்தத்தால் அனைத்தையும் மாற்றி விட முடியாது. அன்னிய நேரடி முதலீட்டிற்கான சலுகைகள் அதிகரிப்பதன் மூலம் உலகளவில் இந்தியாவிற்கான வாய்ப்பு அதிகரிக்கும். சீனாவுடன் ஒப்படும் போது முக்கிய பொருட்களை உற்பத்தி செய்வதில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி 2024-25க்கான பொருளாதார ஆய்வறிக்கை ஐந்தாவது அத்தியாயத்தில் விரிவாக விளக்கியுள்ளோம். கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்கான உற்பத்தி மையங்களை பல்வகைப்படுத்த இந்தியா போன்ற நாடுகளுக்கான கதவுகளை திறந்து விட்டுள்ளன.
சிறிய நிறுவனங்கள் கடன் பெற தடையாக இருப்பவை எவை
சிறிய நிறுவனங்கள் மூலதனச் செலவு, பண அடமானச் செலவு, கூட்டு முதலீடு பற்றிய மனநிலையில் இருந்து வெளிவந்து தங்களுக்கான பணப்புழக்க வரவு, இடர் மதிப்பீட்டிற்கான அணுகுமுறைகளில் கவனம் செலுத்துவது அவசியம். கொரோனா காலத்திற்கு பிறகு எம்.எஸ்.எம்.இ., துறையில் பணப்புழக்கத்தினை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு கடன் உத்தரவாத திட்டங்களை அதிகரித்துள்ளது. இதன் நம்பகமான பரிமாற்றத்தின் மூலம் சிறிய நிறுவனங்கள் பொருளாதாரத்திறனை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புக்கள் உள்ளன.
வேலைவாய்ப்போடு வருமானத்தையும் எப்படி உயர்த்துவது
வேலைவாய்ப்போடு வருமானத்தை உயர்த்த முதலீட்டார்களின் முதலீடு மற்றும் லாப வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் தனியார் துறையின் முதலீடு திருப்தியளிக்கும் வகையில் முன்னேற துவங்கியுள்ளது. உற்பத்தித்துறையில் தொழிலாளர்களின் உழைப்பு தேவைப்படும் இடங்களை கவனிக்க வேண்டும். இதற்கு பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்ப இலக்கு நிர்ணயித்தல் திட்டங்கள் வகுக்க வேண்டும்.
கிராமப்புறங்களில் வாங்கும் சக்தியை அதிகரிக்க
வாங்கும் சக்தியை அதிகரிக்க வேலைவாய்ப்புகள், தொழில்முனைவு, வருமான விகிதம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். மத்திய அரசின் பிரதமர் கிசான் சம்மான் நிதி, குறைந்தபட்ச ஆதார விலை போன்றவை கிராமப்புறங்களில் வாங்கும் சக்தியை அதிகரித்துள்ளது.
அரசின் வரிக்குறைப்பு நடவடிக்கைகள், வரிச்சலுகைகளும் பணவீக்கத்தை குறைக்க முக்கிய பங்கு வகிக்கின்றன.
இவ்வாறு பேட்டியளித்தார்.

