/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மொழியைக் கற்க வேண்டும் கருத்தரங்கில் தகவல்
/
மொழியைக் கற்க வேண்டும் கருத்தரங்கில் தகவல்
ADDED : ஏப் 04, 2025 05:12 AM
மதுரை: ''தமிழ்மொழியின் ஒவ்வொரு சொல்லும் வாழ்வியலைக் கற்றுத்தருவதால் மொழியைக் கற்கவேண்டும்'' என மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் நடந்த தமிழ்க்கூடல் நிகழ்வில் மதுரை வெள்ளைபாறைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் துளிர் தெரிவித்தார்.
ஆய்வு வளமையர் ஜான்சிராணி வரவேற்றார். இயக்குநர் பொறுப்பு அவ்வை அருள் தலைமை வகித்தார். 'தமிழ் வழிப்படூஉம் பெருவாழ்வு' எனும் தலைப்பில் துளிர் பேசியதாவது:
இறந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலத்தை இணைக்கும் கருவியாக மனிதன் மொழியைப் பயன்படுத்தினான். விலங்குகளிடம் எதிர்காலச் சிந்தனை இருக்காது. உலகின் மூத்தமொழி தமிழ் என்கின்றனர் மேலைநாட்டு அறிஞர்கள். மொழியைப் பயன்படுத்தும் விதத்தில் தமிழர்கள் உச்சகட்ட நாகரிகத்தை அடைந்துள்ளனர்.
தமிழும் சீனமும் வாழ்வியலோடு இணைந்த மொழிகள். சொல்பெருக்கு என்பது ஒரு மொழியின் வளர்ச்சியை உணர்த்துகிறது. அவ்வை ஆத்திசூடியின் 109 வரிகள் வாழ்வியலை கற்றுத்தருகின்றன. தமிழ்மொழியின் ஒவ்வொரு சொல்லும் வாழ்வியலைக் கற்றுத்தருகிறது. எனவே மொழியைக் கற்கவேண்டும் என்றார். ஆய்வறிஞர் சோமசுந்தரி நன்றி கூறினார்.