ADDED : ஆக 10, 2025 03:29 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சி பொம்மன்பட்டியில் ரோட்டை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அப்பகுதியைச் சேர்ந்த பாக்கியம் கூறியதாவது: பொம்மன்பட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மேல் நாச்சிகுளத்தில் இருந்து பொம்மன்பட்டி வழியாக அம்மாச்சியாபுரம், கருப்பட்டி செல்லும் ரோடு குண்டும், குழியுமாக மோசமாக சேதம் அடைந்து உள்ளது. இங்கு ரோடு அமைத்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.
சரியான முறையில் பராமரிக்காததால் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து கரடு முரடாக காட்சியளிக்கிறது. ரோடு குறுகலாகவும் உள்ளது. பள்ளி வாகனங்கள், ஏராளமான டூவீலர்கள் இப்பகுதியில் செல்கின்றன. டூவீலரில் செல்வோர் இரவில் சறுக்கி விழுகின்றனர். பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பயனில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அகலமான ரோடு அமைக்க வேண்டும் என்றார்.