/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உசிலம்பட்டி கண்மாய் சீரமைக்கும் பணி ஆய்வு
/
உசிலம்பட்டி கண்மாய் சீரமைக்கும் பணி ஆய்வு
ADDED : ஜூன் 25, 2025 08:35 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டியின் நீராதாரமாக உள்ள கண்மாய் சாக்கடை, குப்பைகள் நிரம்பியுள்ளது. ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் கண்மாய் சீரமைப்பு பணிக்காக திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஆலோசனைக் கூட்டம் விஞ்ஞானி டேனியல் செல்லப்பா தலைமையில் நடந்தது.
நகராட்சித் துணைத்தலைவர் தேன்மொழி, கமிஷனர் இளவரசன், பொறியாளர் சசிகுமார், உசிலம்பட்டி பகுதி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உசிலம்பட்டியில் சேரும் கழிவு நீர் இயற்கையாக சென்று சேரும் கவண்டன்பட்டி ஊருணி பகுதியில் சுத்திகரிப்பு மையம் அமைக்கவும், அதற்காக கழிவுநீர் முழுவதையும் அப்பகுதிக்கு கொண்டு செல்வது, உசிலம்பட்டி கண்மாய்க்குள் கழிவு நீர் சேராமல் பராமரிப்பது, கரைகளை உயர்த்தி நடைபாதை, கழிப்பிட வசதி உள்ளிட்டவை ஏற்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர்.
நீர்வளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டுத்துறையினர் உசிலம்பட்டி கண்மாய்க்கு வரும் கழிவுநீரை சுத்தப்படுத்தி உசிலம்பட்டி கண்மாய்க்குள் சேர்த்தால் மட்டுமே கண்மாயில் தொடர்ந்து தண்ணீர் இருக்கும். அதனால், கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகளை உசிலம்பட்டி மற்றும் கவண்டன்பட்டி ஊருணி பகுதியில் என இரண்டு இடங்களில் அமைக்க வேண்டும்.
அதே போல், கண்மாய்க்கு நீர் வரத்து, நீர் வெளியேறும் பகுதிகளுக்கான கட்டமைப்பு உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
மீண்டும் இது குறித்து அடுத்தகட்ட ஆலோசனை விரைவில் நடத்துவோம். பணிகள் துவங்குவதற்கு முன்பாக அதனை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் துாய்மை பராமரிப்பு, குப்பைகளை சரியான இடத்தில் சேர்ப்பது உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.