ADDED : ஜன 17, 2025 05:33 AM

அலங்காநல்லுார்: ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடு பிடி வீரர்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மக்களுக்கு பெருமை
முதல்பரிசு பெற்ற காளை உரிமையாளர் மோகன்: பல ஆண்டுகளாக காளைகள் வளர்த்து வருகிறோம். பல போட்டிகளில் 'பாகுபலி' பங்கேற்றுள்ளது. மதுரையில் இது முதல் போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மதுரை மண்ணில் இந்த வெற்றி சேலம் மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளது. எங்கள் காளை களத்தில் தன் திறமையை நிரூபித்து பரிசு வாங்கும் என எங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளது. பரிசாக கிடைத்த டிராக்டர் மூலம் எங்கள் பகுதி விவசாய நிலங்களை குறைந்த செலவில் உழுது தர உள்ளோம் என்றார்.
வீரர்களுக்கு இன்சூரன்ஸ்
முதல் பரிசு பெற்ற மாடுபிடி வீரர் அபி சித்தர்: கடந்தாண்டு அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டியில் 2ம் பரிசு பெற்றேன். இந்தாண்டு முதல் பரிசு பெற வேண்டும் என முடிவு செய்து களம் கண்டேன். 20 காளைகளை அடக்கி முதல் பரிசு பெற்றது மகிழ்ச்சி அளித்துள்ளது. போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கும் இன்சூரன்ஸ் செய்ய வேண்டும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இறந்த சக மாடுபிடி வீரர் சகோதரரின் குடும்பத்திற்கு கூடுதல் நிதி அரசு வழங்க வேண்டும் என்றார்.