/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஒருங்கிணைந்த நீர்நிலைகள் பறவைகள் கணக்கெடுப்பு
/
ஒருங்கிணைந்த நீர்நிலைகள் பறவைகள் கணக்கெடுப்பு
ADDED : டிச 29, 2025 05:30 AM

மதுரை: மதுரை வனக்கோட்டம் சார்பில் ஒருங்கிணைந்த நிர்நிலைகள் பறவைகள் கணக்கெடுப்பின் முதற்கட்ட பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக மாணவர்கள், புகைப்பட கலைஞர்கள், பறவை ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து அமெரிக்கன் கல்லுாரி, லேடி டோக் கல்லுாரி, வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, விவேகானந்தா கல்லுாரி, அருள் ஆனந்தர் கல்லுாரி, அரசு சட்டக் கல்லுாரி, உசிலம்பட்டி பி.எம்.டி., கல்லுாரி, மேட்டுப்பாளையம் வனக் கல்லுாரி, ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து 150 மாணவர்கள் பங்கேற்றனர்.
நேற்று முன்தினம் மாவட்ட வன அலுவலகத்தில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று காலை 6:00 மணி முதல் வண்டியூர், அவனியாபுரம் ஏரி, திருமோகூர், மாடக்குளம் உள்ளிட்ட 25 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது.
பனை உழவாரன், அன்றில் பறவை, பல்வேறு கொக்கு, நாரை இனங்கள் உட்பட 19 பறவை இனங்கள் கண்டறியப்பட்டன. உள்ளான், பச்சை உள்ளான், சதுப்பு நில பூனைப் பருந்து, வெண்புருவ வாத்து, தட்டைவாயன், ஊசிவால் வாத்து, நீலவால் பஞ்சுருட்டான், விரால் அடிப்பான் ஆகிய 8 இடம்பெயரும் பறவை இனங்களும் கண்டறியப்பட்டன.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இக்கணக்கெடுப்பின் மூலம் பறவைகளின் முக்கிய இனப்பெருக்க இடங்களை கண்டறியவும், அழிந்து வரும் நிலையில் உள்ள இனங்கள், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வாழும் இனங்களின் நிலையை மதிப்பீடு செய்யவும், மண்டலங்களுக்கு இடையேயான பறவைகளின் இடம்பெயர்வு முறையை படிக்க உதவும். தரவுகள் தொகுக்கப்பட்டு மாநில அளவிலான குழுவால் சரிபார்க்கப்பட்டு இறுதி அறிக்கை வெளியிடப்படும் என்றனர்.

