ADDED : செப் 06, 2025 04:24 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே தேனுார் பழைய காலனி பகுதியில் செல்லும் பாசன உபரிநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
அப்பகுதி சுப்பையா கூறியதாவது: தேனுார் கண்மாய் பள்ளமடையில் இருந்து வெளியேறும் உபரி நீர், இக்கால்வாய் வழியே சென்று வைகையில் கலக்கிறது. மழைக் காலங்களில் அதிக தண்ணீர் இதன் வழியே செல்லும். கால்வாயைச் சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
இக்கால்வாய் குப்பை நிறைந்து துார்வாரப்படாமல் உள்ளது. மழைக்காலங்களில் கால்வாயில் தண்ணீர் எளிதாக செல்ல முடியாமல் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. ஊராட்சி நிர்வாகம் சாக்கடை கால்வாயை இதனுடன் இணைத்துள்ளது. கழிவு நீர் ஒருபுறம் மட்டும் செல்வதற்காக பாசனக்கால்வாயின் குறுக்கே மணலால் அணை போன்று அமைக்கப்பட்டுள்ளது.
பாசன கால்வாயில் கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. ஊராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் பலனில்லை. ஒன்றிய, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.