/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஓட்டுநர்கள் இதய பரிசோதனை செய்தல் மிக அவசியம்
/
ஓட்டுநர்கள் இதய பரிசோதனை செய்தல் மிக அவசியம்
ADDED : செப் 29, 2024 06:48 AM

மதுரை : ஓட்டுநர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் வலி இல்லாமல் மாரடைப்பு வருவதால் உடனுக்குடன் ரத்த பரிசோதனை செய்வது அவசியம் என டாக்டர் மாதவன் கூறினார்.
அவர் கூறியதாவது: 40 ஆண்டுகளுக்கு முன் மக்களின் மரணங்களுக்கு காரணமாக காசநோய், காலரா போன்ற தொற்று நோய்கள் இருந்தது. தற்போது ஏற்படும் இள வயது மரணங்களுக்கு முக்கிய காரணமாக மாரடைப்பு, பக்கவாதம் இருக்கிறது.
நாட்டில் ஆண்டிற்கு 2 கோடி மக்கள் இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்த மரணங்களை சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் 95 சதவீதம் வரை குறைக்க முடியும் என உலக சுகாதார அமைப்பு ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.
ஜெனீவாவை தலைமையிடமாக கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனமாகிய 'வேர்ல்டு ஹார்ட் பெடரேஷன்' 2000ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் கடைசி ஞாயிறை உலக இதய தினமாக கடைபிடித்து வருகிறது.
இதய நோய் வராமல் தடுக்க பல விழிப்புணர்வு நடவடிக்கைகள் நம் நாட்டில் தொடங்கியது. புகைப்பிடித்தலை தவிர்த்து, எளிய உடற்பயிற்சிகள் மூலம் உடல் எடை பராமரித்து, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டும்.
பழங்களை தினமும் சாப்பிட்டால் விரைவில் முதுமை அடைவதை தவிர்க்கலாம்.
உலகத்தில் ஒவ்வொரு நாடுகளுக்கும் உணவில் சேர்க்கப்படும் உப்பு அளவு குறிப்பிட்ட அளவிற்கு மேல் இருக்க கூடாது என்ற வரம்பு உள்ளது. ஒரே சிப்ஸ் கம்பெனியின் உப்பு அளவு வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு அளவில் இருக்கும்.
பின்லாந்தில் 30 ஆண்டுகளாக உப்பு அளவை ஒழுங்கான முறையில் கடை பிடிப்பதால் அந்நாட்டில் ரத்த அழுத்தம், இதய பிரச்னைகள் மிகவும் குறைவு. அதற்கு 'பின்லாந்து பார்முலா' என்ற பெயரே உள்ளது.
ஓட்டுநர்கள் பலர் உடல் பருமனோடும் புகைபிடிப்பவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களுக்கு இதய செயல்திறன் மிக குறைவாக உள்ளது.
பணியில் இருக்கும் போதே அவருக்கு ஏற்படும் எதிர்பாராத மாரடைப்பால் அவரை நம்பி பயணிக்கும் பயணிகளுக்கு ஆபத்து நேரிட வாய்ப்பு இருக்கிறது.
ஓட்டுநர்கள் மட்டுமில்லாமல் உரிமையாளர்களும் அவர்களின் பணி நேரத்திற்கு தகுந்த ஓய்வு அளித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனைகள் மேற்கொண்டு முறையான ஆலோசனை பெறுவது அவசியம் என்றார்.