/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கைதிக்கு துணைபோகும் சிறை நிர்வாகம் மதுரையில் கஞ்சா கொடுத்த காவலர் சஸ்பெண்ட்
/
கைதிக்கு துணைபோகும் சிறை நிர்வாகம் மதுரையில் கஞ்சா கொடுத்த காவலர் சஸ்பெண்ட்
கைதிக்கு துணைபோகும் சிறை நிர்வாகம் மதுரையில் கஞ்சா கொடுத்த காவலர் சஸ்பெண்ட்
கைதிக்கு துணைபோகும் சிறை நிர்வாகம் மதுரையில் கஞ்சா கொடுத்த காவலர் சஸ்பெண்ட்
ADDED : பிப் 14, 2024 01:08 AM
மதுரை:தமிழகத்தில் கைதிகளுக்கு துணைபோகும் அதிகாரிகள், காவலர்களால் சிறை நிர்வாகத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. மதுரையில் கைதிக்கு கஞ்சா சப்ளை செய்த காவலர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
திருநெல்வேலியில் வழக்குகளில் ஜாமின் கிடைக்காத நிலையில் கைதியை விடுவித்தது குறித்து விசாரிக்க டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மதிச்சியம் கார்த்திக் என்ற வழுக்கை கார்த்திக் 26. கஞ்சா வழக்கில் இரண்டு ஆண்டுகளாக மதுரை சிறையில் விசாரணை கைதியாக உள்ளார்.
இவரிடம் இரு நாட்களுக்கு முன் 15 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அவரிடம் நடத்திய விசாரணையில் சிறை காவலர் ஆனந்தராஜ் தொடர்ந்து சப்ளை செய்தது தெரிந்தது. இதைதொடர்ந்து ஆனந்தராஜ் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
சில காவலர்கள் மூலம் கைதிகளுக்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் எளிதாக கிடைப்பது சிறை நிர்வாகத்தின் கண்காணிப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.
கைதிகள் தப்பி ஓடுவதும் தொடர்கிறது. சமீபத்தில்கூட பரோலில் சென்ற ராஜபாளையம் கைதி இதுவரை சிறைக்கு திரும்பவில்லை. இதற்கு கைதிகளுக்கு சிறை நிர்வாகம் கொடுக்கும் 'சுதந்திரமே' காரணம்.
காவலர்கள் ஒரே இடத்தில் பணியாற்றுவது, கைதிகளிடம் நட்பாக பழகுவது போன்ற காரணங்களால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதாக சக காவலர்கள் தெரிவிக்கின்றனர்.
திருநெல்வேலி சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தவர் ரஞ்சித் கார்த்திக். இவர் மீது வழிப்பறி உட்பட ஐந்து வழக்குகள் உள்ளன.
ஒரு வழக்கில் ஜாமின் கிடைத்தாலும், பிற வழக்குகளில் கிடைக்காத பட்சத்தில் கைதியை விடுவிக்கக்கூடாது என்பது விதி. ஆனால் அங்குள்ள அதிகாரியின் பரிந்துரையில் கார்த்திக் விடுவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது உயரதிகாரிகளுக்கு தெரியவந்ததை தொடர்ந்து உடனடியாக கார்த்திக்கை தேடிபிடித்தனர்.
சட்டரீதியாக சிறையில் அடைக்க தேவையான ஆவணங்களை தயார் செய்ய கார்த்திக்கை சில நாட்களாக மறைமுக இடத்தில் 'சிறை' வைத்தனர். பின்னர் ஆவணங்கள் தயாரானதும் அவரை தற்போது நாங்குநேரி சிறையில் அடைத்துள்ளனர்.
இதுகுறித்த விபரங்களை உளவுத்துறை மூலம் அறிந்து அதிர்ச்சியடைந்த டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள், முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனால் கண்காணிக்க தவறிய கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணன் உள்ளிட்டோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

