/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அலங்காநல்லூர் கீழக்கரையில் 5 நாட்கள் தொடர் ஜல்லிக்கட்டு: ஜன., 24 ல் முதல்வர் ஸ்டாலின் அரங்கை திறக்கிறார்
/
அலங்காநல்லூர் கீழக்கரையில் 5 நாட்கள் தொடர் ஜல்லிக்கட்டு: ஜன., 24 ல் முதல்வர் ஸ்டாலின் அரங்கை திறக்கிறார்
அலங்காநல்லூர் கீழக்கரையில் 5 நாட்கள் தொடர் ஜல்லிக்கட்டு: ஜன., 24 ல் முதல்வர் ஸ்டாலின் அரங்கை திறக்கிறார்
அலங்காநல்லூர் கீழக்கரையில் 5 நாட்கள் தொடர் ஜல்லிக்கட்டு: ஜன., 24 ல் முதல்வர் ஸ்டாலின் அரங்கை திறக்கிறார்
ADDED : ஜன 18, 2024 07:52 AM

மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே கீழக்கரையில் புதிதாக கட்டப்பட்ட கலைஞர் நுாற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கை' ஜன.,24 ல் முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார். ஜன., 28 வரை 5 நாட்கள் அங்கு தொடர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடக்க உள்ளது.
16 ஏக்கரில் ரூ.44 கோடி மதிப்பில் தரைத்தளம், முதல்தளம், 2வது தளம் என 3 காலரியில் 5000 பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கும் வகையில் கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லுார், பாலமேட்டில் இருப்பதைப் போன்று காளைகளை களத்திற்கு அனுப்பும் வகையில் பாரம்பரிய வாடிவாசல் கட்டப்பட்டுள்ளது. இங்கு வரிசையாக 250 காளைகளை அனுப்பும் வசதியுள்ளது. அதுமட்டுமின்றி வளாகத்தில் மொத்தமாக ஆயிரம் காளைகளை கட்டி வைக்கும் அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மற்ற வாடிவாசல்களில் இருந்து காளைகள் வெளியேறும் போது அவற்றை பிடிப்பது உரிமையாளர்களுக்கு சிரமமாக இருக்கும். இங்கு வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளைகளை உரிமையாளர்கள் பிடித்துச் செல்லும் வகையில் பிரத்யேக வழி அமைக்கப்பட்டுள்ளது. மதுரையில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு நடக்கும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுாரில் பார்வையாளர்கள் நின்றவாறே போட்டிகளை ரசிப்பர். இங்கு ஒரே நேரத்தில் 5000 பேர் அமர்ந்து வசதியாக பார்க்கும் பிரமாண்ட ஸ்டேடியம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு வளாக பணிகள் முழுமையாக முடிந்த நிலையில் நேற்று இந்த வளாகத்தை கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் தலைமை செயலர் மங்கத் ராம் சர்மா ஆய்வு செய்தார்.
இந்த அரங்கை ஜன., 24 ல் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இதையொட்டி ஜன., 24 முதல் 28 வரை தொடர்ந்து 5 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடக்க உள்ளது. முதல்நாள் மதுரை மாவட்ட காளைகள், அடுத்தடுத்த நாட்களில் பிற மாவட்ட காளைகள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் வீதம் பொறுப்பளிக்கப்பட்டு அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த 500 முதல் 700 காளைகளை தினமும் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இனிமேல் துவங்கும். காளைகளுக்கான பரிசோதனை அந்தந்த கால்நடை மருந்தகங்களில் நடத்தப்படும்.