/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வழக்குகளில் உண்மையின் பல்வேறு கோணங்களை ஆராய வேண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவுரை
/
வழக்குகளில் உண்மையின் பல்வேறு கோணங்களை ஆராய வேண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவுரை
வழக்குகளில் உண்மையின் பல்வேறு கோணங்களை ஆராய வேண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவுரை
வழக்குகளில் உண்மையின் பல்வேறு கோணங்களை ஆராய வேண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவுரை
ADDED : அக் 27, 2025 03:19 AM

மதுரை:  ''ஒரு வழக்கில் இருக்கும் உண்மையின் வெவ்வேறு கோணங்களை ஆராய்ந்து செயல்பட வேண்டும்'' என மதுரை அரசு சட்டக் கல்லுாரியில் நடந்த தேசிய மாதிரி நீதிமன்றப் போட்டி நிறைவு விழாவில், உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவுரை வழங்கினார்.
விழாவில் சட்டக் கல்வி இயக்குநர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் குமரன் வரவேற்றார்.
சுவாமிநாதன் பேசியதாவது:
ஒரு நீதிபதி முன்பு வழக்கு தாக்கல் செய்யும் முன், சாதகமான தீர்ப்பை பெற முதலில் அவரைப் பற்றி அடிப்படை மதிப்பீடு செய்திருக்க வேண்டும். எதிர்தரப்பினர் என்ன பதில் கூறுவர் என்பதை அறிந்து கேள்வி கேட்க வேண்டும். அதற்கு வழக்காடு மன்றத்தில் மட்டுமின்றி, மனதிற்குள்ளேயே பேசி பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
எந்த ஒரு வழக்கிலும், அதில் உள்ள உண்மைக்கு இருக்கும் வெவ்வேறு கோணங்களை ஆராய்ந்து செயல்பட வேண்டும். காலத்திற்கு ஏற்றார்போல் மேற்கொள்ளப்படும் சட்ட திருத்தங்கள், முக்கிய தீர்ப்புகள் குறித்த அறிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். வழக்காடும் போது சமயோஜித புத்தியுடன் செயல்பட வேண்டும். நீதிபதி எச்.ஆர்.கண்ணாவை போன்று நெறிமுறை உணர்வுடன் நியாயம் பக்கம் நிற்க வேண்டும் என்றார்.
பின் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். சேலம் அரசு சட்டக் கல்லுாரி முதலிடம், கோவை அரசு சட்டக் கல்லுாரி 2ம் இடம் வென்றன. உதவிப் பேராசிரியர் சோனா நன்றி கூறினார்.
சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி முதல்வர் ஜெயா கவுரி, திருநெல்வேலி அரசு சட்டக் கல்லுாரி முதல்வர் ராமபிரான் ரஞ்சித்சிங், தர்மபுரி அரசு சட்டக் கல்லுாரி பேராசிரியர் சிவதாஸ் உட்பட 16 சட்டக் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.

