/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நீதிபதி நடராஜன் சுயசரிதை புத்தகம் வெளியீடு
/
நீதிபதி நடராஜன் சுயசரிதை புத்தகம் வெளியீடு
ADDED : நவ 16, 2025 02:01 AM

மதுரை: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி நடராஜன் நினைவு சொற்பொழிவு மற்றும் அவரது சுயசரிதை புத்தகம் வெளியீட்டு விழா, அவரது பெயரிலான அறக்கட்டளை, உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மதுரையில் நேற்று நடந்தது.
இதில், உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது:
மனிதனுக்கும், புத்தகத்திற்கும் தொடர்பு உண்டு. வாழ்க்கை என்பது ஒரு கால சக்கரத்திற்குட்பட்டது. பிறப்பு, இறப்பை மாற்ற முடியாது; அதை நம்மால் தடுக்க முடியாது.
இக்காலகட்டத்தில் விட்டு செல்லும் எச்சங்கள் முக்கியம். அது செயல்களாக இருக்கலாம். மனிதன் மறையலாம்; புகழ் மறையாது.
நல்லவர்களை பாராட்ட வேண்டும். அனைத்து புகழுக்கும் தகுதியானவர் நடராஜன்.
ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணம் அவர். அரசு வழக்கறிஞராக இருந்தபோது, நீதி மீது தீராத காதல், பக்தி கொண்டார்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக பல நல்ல தீர்ப்புகளை அளித்தவர். அவரது வாழ்க்கை நமக்கு பாடம்.
இவ்வாறு அவர் பேசினார்.
உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேசியதாவது:
மறைந்த நடராஜனுக்கு தற்போது வயது 101. நுாறு ஆண்டுகள் கடந்த பின்னும் ஒரு நீதிபதியை நினைவு கூர்ந்து போற்றி விழா எடுப்பது, அனைவருக்கும் நிகழ்வதில்லை. பலர் நீதிபதிகளாக வந்து நீதி பரிபாலனம் செய்கின்றனர்.
சில ஆண்டுகளில் அப்படி ஒருவர் இருந்தார் என்பதை அறியாமல் நகர்ந்து செல்கிறோம். நடராஜன், சட்டம், நீதித்துறையை தாண்டி இலக்கியம், சமூகம், கல்வி என அனைத்திலும் தடம் பதித்தவர். இறுதி மூச்சுவரை சமூகத்திற்காக பாடுபட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
உயர் நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி அனிதா சுமந்த், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். நீதிபதி நடராஜன் அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் ரமேஷ்ராஜன் நன்றி கூறினார்.

