
மேலுார், : நரசிங்கம்பட்டியில் திருக்கார்த்திகையை முன்னிட்டு மண் மலையான விநோத திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நரசிங்கம்பட்டி பெருமாள் மலை அடிவார கோயில் கார்த்திகை விழாவில் பக்தர்கள் எல்லா வளமும் கிடைக்க வேண்டி நரசிங்கம்பட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயில் முன் உள்ள ஓடையில் நீராடினர்.
அங்கிருந்து ஒரு பிடி மணலை எடுத்து வந்து கோயில் முன் போட்டு வழிபட்டனர். இவ்வாறு ஆண்டுதோறும் பக்தர்கள் போட்ட மணல் இன்று மலை போல் குவிந்துள்ளது.
இம் மண் மலையை மூன்று முறை சுற்றி வந்த பக்தர்கள் உப்பு, மிளகு போன்றவற்றை நேர்த்தி கடனாக செலுத்தி வழிபட்டனர். குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் தங்களது குழந்தையை கரும்புத் தொட்டிலில் கட்டி வந்து முடிகாணிக்கை செலுத்தினர்.
இதேபோல சோமகிரி மலை அடிவாரத்தில் உள்ள மேலவளவு கருப்பு சுவாமி கோயிலுக்கு வந்த பக்தர்கள், மலை மீது ஏறி கற்களை வீசியும், விளக்கு ஏற்றியும் வழிபட்டனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அரிவாளை காணிக்கையாக செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.