/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வெளிநாட்டவர் விரும்பும் வாழைநார் பொருட்கள் காதி கிராம ஆணைய இயக்குநர் பெருமிதம்
/
வெளிநாட்டவர் விரும்பும் வாழைநார் பொருட்கள் காதி கிராம ஆணைய இயக்குநர் பெருமிதம்
வெளிநாட்டவர் விரும்பும் வாழைநார் பொருட்கள் காதி கிராம ஆணைய இயக்குநர் பெருமிதம்
வெளிநாட்டவர் விரும்பும் வாழைநார் பொருட்கள் காதி கிராம ஆணைய இயக்குநர் பெருமிதம்
ADDED : ஜூலை 11, 2025 03:45 AM

மதுரை:'நமது நாட்டில் வாழைநாரில் தயாரிக்கும் கைவினைப் பொருட்களை வெளிநாட்டவர்கள் அதிகம் விரும்புகின்றனர்' என்று பெட்கிராட் சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காதி கிராம ஆணைய கோட்ட இயக்குநர் செந்தில்குமார் ராமசாமி பெருமிதம் கொண்டார்.
மதுரையில் நடந்த கைவினைப் பொருட்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
காதி ஆணையம் கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பை தருவதோடு, வாழ்வாதாரம் உருவாக்கும் வாய்ப்பையும் தருகிறது. பங்கேற்போரில் பத்து பேர் பயனடைந்தாலும் அரசின் நோக்கம் வெற்றியடையும்.
நம்மூர் வாழை நாரில் செய்த கைவினைப் பொருட்களுக்கு வெளிநாடுகளில் நல்ல மதிப்பு உள்ளது. வாழை நாரில் தயாரித்த சேலை தரமான பட்டுச் சேலைக்கு நிகராக உள்ளது.
மேலக்கால் முருகேசன் தயாரிக்கும் வாழை நார் கைவினைப்பொருட்கள் அமெரிக்கா, துபாய், குவைத் நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. அவரைப் போல நீங்களும் பலருக்கு வேலை வழங்க வேண்டும். இதற்கான பயிற்சியை அரசே தந்து, உங்கள் பொருட்களை நல்ல விலைக்கு அரசே வாங்கும்.
தையல் இயந்திரம் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளோருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் 150 குடும்பங்கள் நேரடியாக பலனடைந்துள்ளது. செருப்பு தைப்போர், மட்பாண்டம் செய்வோர், மரக்கழிவுகளால் பொம்மை தயாரிப்போருக்கு மானியத் தொகையை அரசே வழங்குகிறது.
தேனீ வளர்ப்பவர்கள் 10 பெட்டிகள் மூலம் ரூ.2 லட்சம் சம்பாதிக்கலாம். அகர்பத்தி, சோப்பு தயாரிக்கும் பயிற்சியும் வழங்குகிறோம் என்றார்.
பெட்கிராட் நிர்வாக இயக்குநர் சுப்புராம், தலைவர் கிருஷ்ணவேணி, பொதுச் செயலாளர் அங்குசாமி, கே.வி.ஐ.சி., துணை இயக்குநர் செந்தில் குமார், வாழை நார் இயற்கை நிறுவனத் தலைவர் முருகேசன், ரூட்செட் முதுநிலை பயிற்றுநர் வீரராகராவ் பேசினர். பொருளாளர் சாரா ரூபி நன்றி கூறினார்.