/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதல்வரின் இலவச காப்பீடு திட்டத்தில் சிறுநீரக சிகிச்சை
/
முதல்வரின் இலவச காப்பீடு திட்டத்தில் சிறுநீரக சிகிச்சை
முதல்வரின் இலவச காப்பீடு திட்டத்தில் சிறுநீரக சிகிச்சை
முதல்வரின் இலவச காப்பீடு திட்டத்தில் சிறுநீரக சிகிச்சை
ADDED : செப் 05, 2024 03:54 AM
'எக்ஸ்ட்ரா கார்போரல் ஷாக்வேவ் லித்தோட்ரிப்சி' (இ.எஸ்.டபிள்யூ.எல்.) என்பது சிறுநீரகம் மற்றும் சிறுநீர்க்குழாயில் படிந்துள்ள கற்களை உடைத்து நொறுக்குவதற்கான அதிர்வலை சிகிச்சை கருவி. இக்கருவியை வயிற்றின் மேல் சிறுநீரக பகுதியில் வைத்து சக்தி வாய்ந்த அழுத்த அலைகளை வெளியில் இருந்து செலுத்தும் போது, சிறுநீர்க் கற்கள் உடைந்து துாளாகி சிறுநீருடன் சேர்ந்து வெளியேறும்.
எந்த வயதிலும், ஆண், பெண் இருபாலருக்கும் இப்பிரச்னை வரலாம். உடலுக்கு தேவையான தண்ணீரைக் குடிக்காதது ஒரு காரணம் என்றாலும் சிலருக்கு பரம்பரையாக சிறுநீரில் உப்புத்தன்மை அதிகம் இருக்கும்.
குறிப்பிட்ட அளவைத் தாண்டும் போது உப்பு படிவம் கற்களாக உருமாறுகிறது.
போதுமான தண்ணீர் குடித்தால் சரிசெய்யலாம். கற்கள் இருந்தால் முதுகில் வலி வரும். இது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையில் தெரியவரும். சிலருக்கு சிறுநீரகத்திலும், சிறுநீர்க் குழாயிலும் கற்கள் படிந்திருக்கும்.
மதுரை அரசு மருத்துவமனையில் ஏற்கனவே இருந்த 'லித்தோட்ரிப்ஸி' கருவி பழுதடைந்த நிலையில் மூன்றாண்டுகளாக நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்தனர்.
பிப். 27ம் தேதி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் சிறுநீரக அறுவை சிகிச்சை துறையில் இக்கருவியை துவக்கி வைத்தார். இதன் மூலம் தற்போது மாதம் 70 -- 80 பேர் பயன்பெறுவதாக டீன் செல்வராணி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: அதிர்வலைகளை சிறுநீரக கற்களின் மீது செலுத்துவதன் மூலம் அவை நொறுக்கப்பட்டு சிறுநீர்க்குழாய் வழியாக வெளியேற்றப்படுகிறது.
இந்த சிகிச்சைக்கு ஒருமணி நேரம் ஆகலாம். சிகிச்சைக்குப் பின் நோயாளியின் உடல்நிலையை கண்காணித்து, சில மருந்துகளுடன் ஆலோசனை வழங்கப்படுகிறது.
நோயாளிகளின் உடல்நிலை, கற்களின் தன்மைக்கு ஏற்ப அதிர்வலை சிகிச்சை முடிவு செய்யப்படும். பெரும்பாலும் உள்நோயாளியாக, நல்ல உடல்நிலை உள்ளவர்களுக்கு வெளிநோயாளியாகவும் சிகிச்சை வழங்கப்படுகிறது. எல்லா நோயாளிகளுக்கும் இந்த அதிர்வலை சிகிச்சை முறை சாத்தியமில்லை. சிலருக்கு அறுவை சிகிச்சை முறைகூட தேவைப்படலாம்.
முதல்வரின் விரிவான இலவச காப்பீட்டு திட்டத்திலும் இலவசமாக இச்சிகிச்சையை பெறலாம். காப்பீட்டு திட்டத்தில் இல்லாதவர்கள் சிகிச்சை பெற தமிழக மருத்துவ கழகம் விதிப்படி ரூ.5000 செலுத்த வேண்டும். கற்களின் தன்மைக்கேற்ப சிகிச்சை நாட்கள் கூடுதலாகும். தனியார் மருத்துவமனைகளில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றார்.