UPDATED : மே 25, 2023 03:08 PM
ADDED : டிச 16, 2021 12:30 AM
இன்றைய கடினமான சூழலில் அருள்நிறை திருஞானசம்பந்தர் அருளியகோளறு பதிகம் பாடல்களை பொருள் உணர்ந்து படித்தால் துன்பங்கள் நீங்கும்,துயர் விலகும், நன்மை பயக்கும். பதிகத்தின் 11 பாடலுக்கும் ஓவியர் பத்மவாசன் விளக்கமும், சித்திரமும் எழுதியுள்ளார். அவை இந்த பகுதியில் மார்கழியின்முதல் 11 நாட்கள் இடம்பெறும்.
பாடல்: 1
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்மிகநல்ல வீணை தடவிமாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்உளமே புகுந்த அதனால்ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளிசனி பாம்பு இரண்டும் உடனேஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்லஅடியார் அவர்க்கு மிகவே.
பொருள்:
வனப்பும், திரண்டும், பளபளப்பும் மிகுந்த, பச்சை வண்ண மூங்கில் போன்ற திருத்தோள்களை உடைய, உமாதேவியாரை ஒரு பாகமாக தன் இடப்பாகத்தில் வைத்தவரும் பாற்கடலை கடைந்தபோது பாய்ந்து வந்த விஷத்தை உலகை காக்கவென உருட்டி எடுத்து உண்டவரும், அம்மை கழுத்தை பிடித்து நிறுத்தியதால் நீலகண்டன் என்ற பெயர் பெற்றவரும், மிக அழகிய வீணையில் மிக நல்ல, சுத்தமான சுருதியோடு சுரங்களை மீட்டுபவரும், குற்றமற்ற சந்திரப்பிறையையும், கங்கையையும் தன் முடிமேல் அமரவைத்து இருப்பவருமான பரமேஸ்வரன், என் உள்ளப் பெருங் கோயிலில் அமர்ந்து இருப்பதனால் சூரியன், சந்திரன், செவ்வாய், என்ற அங்காரகன், புதன், வியாழன் என்கிற குரு, வெள்ளி எனப்படும் சுக்கிரன், சனி என்ற சனிபகவான், பாம்புகள் இரண்டாகியராகு, கேது அனைத்தும் பெரிதும் குற்றமற்றன ஆகி நல்லன, நல்லன அவை மிகுந்த நல்லன நல்லனவே சிவனடியாராகிய நமக்கு செய்யும்.
