ADDED : ஆக 17, 2025 03:56 AM
மேலுார்: க.கல்லம்பட்டி மாயகண்ணன், கட்டசோலைபட்டி கோபாலகிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நேற்று கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்றனர். சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. விளையாட்டு போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் பெரியரத வீதி கிருஷ்ணன் கோயிலில் மூலவருக்கு அபிஷேகங்கள், பூஜை நடந்தது. கல்களம் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி வெங்கடாஜலபதிக்கு அபிஷேகம், தீபாராதனை முடிந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
விளாச்சேரி ஸ்ரீ சைதன்ய விட்டல் மந்திர் வேதகுருகுலத்தில் சுப்ரபாதம், ஹோமம் முடிந்து வாசுதேவ கிருஷ்ணர் கருட வாகனத்தில் புறப்பாடானார். இரவு 108 கலசாபிஷேகம், கிருஷ்ணாவதாரகால பூஜை நடந்தது. விளாச்சேரி ஸ்ரீதேவி பூதேவி வெங்கடேச பெருமாள் கோயிலில் தீபாராதனை நடந்தது. சிறுவர்கள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்தனர்.
வாடிப்பட்டி சமயநல்லுார் ராதாகிருஷ்ணன் கோயிலில் 108 விளக்கு பூஜை நடந்தது. மூலவருக்கு 21 வகை அபிஷேகம் செய்யப்பட்டது. பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
வாடிப்பட்டி போடிநாயக்கன்பட்டி கோபாலகிருஷ்ணன் கோயிலில் ஆக.,15 இரவு சுவாமிக்கு ஊஞ்சல் உற்ஸவம், சுவாமிக்கு பால் அபிஷேகம், நடந்தன. அன்னதானம் வழ ங்கப்பட்டது. விநாயகர் கோயிலில் இருந்து முளைப்பாரி ஊர்வலம் புறப்பட்டு கோயில் வந்தனர்.
இன்று(ஆக.,17) காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம், மாலை 5:00 மணிக்கு உற்ஸவமூர்த்தி கருடாழ்வார் மீது அமர்ந்து ஊர்வலமாக வந்து கோயில் வந்தடைவார். நாளை முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது.