/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்து உபகோயில்களில் கும்பாபிஷேகம்
/
குன்றத்து உபகோயில்களில் கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 17, 2025 06:25 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயில்களான சொக்கநாதர், பழநி ஆண்டவர், அங்காள பரமேஸ்வரி குருநாதசுவாமி, பாம்பலம்மன் கோயில்களில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேக திருப்பணிகளை அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணிச்செல்வம்,பொம்ம தேவன், சண்முகசுந்தரம், ராமையா செய்தனர்.
சொக்கநாதர், பழனி ஆண்டவர் கோயில்களில் ஏப்.14ல் துவங்கிய யாகசாலை பூஜை நேற்று காலை பூர்த்தி செய்யப்பட்டது. பூஜித்த மூலவர்களின் சக்தி, கலை இறக்கப்பட்ட புனித நீர் குடங்கள் மூலவர்கள் முன்பு கொண்டு செல்லப்பட்டு, மூலவருக்கு சக்தி கலையேற்றம் செய்யப்பட்டது.
முதலில் சொக்கநாதர் கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்பு பழனியாண்டவர் கோயிலில் யாகசாலை பூஜை பூர்த்தி செய்து, விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர்களுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
அங்காள பரமேஸ்வரி குருநாதசுவாமி, பாம்பலம்மன் கோயில்களில் விமானங்கள் இல்லாததால் ஏப்.15ல் துவங்கிய யாகசாலை பூஜையை நேற்று பூர்த்தி செய்து, மூலவர்களுக்கு சக்தி கலையேற்றம் மற்றும் புனித நீர் மூலம் அபிஷேகம் செய்து கும்பாபிஷேகம் நடந்தது. அங்காள பரமேஸ்வரி குருநாத சுவாமி கோயில் உருவாகி 600 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இங்கு முதல் முறையாக நேற்றுதான் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது என பூஜாரிகள் தெரிவித்தனர்.
மாம்பலம்மன் கோயிலில் 50 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அறங்காவலர் குழுவினர், கோயில் துணை கமிஷனர் சூரிய நாராயணன், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.