/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றம் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
/
திருப்பரங்குன்றம் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : ஜூலை 15, 2025 06:37 AM

திருப்பரங்குன்றம்; முருகனின் முதல் படை வீடான மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று அதிகாலை, ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷங்களுக்கு மத்தியில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக மதுரையிலிருந்து மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன், நேற்றுமுன்தினம் இரவு திருப்பரங்குன்றம் வந்தனர்.
நேற்று அதிகாலை, 3:45 மணிக்கு, எட்டாம் கால யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டது. தீபாராதனை முடிந்து அதிகாலை, 4:25 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய தங்கம், வெள்ளி குடங்களை சிவாச்சாரியார்கள் கோபுரங்கள், விமானங்களுக்கு எடுத்துச் சென்றனர்.
கோபுர கலசத்தின் மீது அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி, பச்சைக்கொடியை காட்ட, அதிகாலை, 5:31 மணிக்கு கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. பின், பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.
மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவள கனிவாய் பெருமாளுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி கரத்திலுள்ள வேல், உற்சவர்களுக்கு மகா அபிஷேகம் முடிந்து, மூலவர்களுக்கு சம காலத்தில் தீபாராதனை நடந்தது.
பின், கோவில் நடை திறக்கப்பட்டு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.