ADDED : மே 19, 2025 04:49 AM

உசிலம்பட்டி : உசிலம்பட்டி தில்லைநாயகபுரம் மகாஈஸ்வரி பத்திரகாளியம்மன், தெப்பத்து கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மே 16ல், கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை நான்காம் கால யாகசலை பூஜைகள் நிறைவு பெற்று புனிதநீர் அடங்கிய கலயங்கள் புறப்பாடாகியது.
இதையடுத்து இரட்டை விநாயகருக்கும், தெப்பத்து கருப்பசாமி, பரிவார தெய்வங்கள், பத்திரகாளியம்மன் கோயிலின் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் தீபாராதனை வழிபாடுகள், அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நட்டாத்தி, சிவகாசி நாடார்கள் உறவின்முறையினர் இணைந்து செய்திருந்தனர்.
அலங்காநல்லுார்: விட்டங்குளம் வீரகாளியம்மன், கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மே 17ல் முதல்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. நேற்று காலை 2ம் காலயாக பூஜைகளை தொடர்ந்து கடம் புறப்பாடானது. சிவாச்சாரியார்கள் ரவிக்குமார், கார்த்திக் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது.
அம்மன் பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.