/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கண்மாய்கள் கண்காணிப்பு குழு அமைக்கப்படுமா எதிர்பார்ப்பில் குன்றத்து விவசாயிகள்
/
கண்மாய்கள் கண்காணிப்பு குழு அமைக்கப்படுமா எதிர்பார்ப்பில் குன்றத்து விவசாயிகள்
கண்மாய்கள் கண்காணிப்பு குழு அமைக்கப்படுமா எதிர்பார்ப்பில் குன்றத்து விவசாயிகள்
கண்மாய்கள் கண்காணிப்பு குழு அமைக்கப்படுமா எதிர்பார்ப்பில் குன்றத்து விவசாயிகள்
ADDED : டிச 23, 2024 05:16 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதிகளில் உள்ள கண்மாய்கள், நீர்வரத்து கால்வாய்களை கண்காணிக்கவும், பாதுகாக்கவும் குழுக்கள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பரங்குன்றத்தை சுற்றிலும் தென்கால், பாணாங்குளம், சேமட்டான், செவ்வந்தி குளம், ஆரியங்குளம், நிலையூர் பெரிய கண்மாய்கள் உள்ளன. தோப்பூர், வேடர் புளியங்குளம், சாக்கிலிபட்டி, தென்பழஞ்சி உள்ளிட்ட மானாவாரி கண்மாய்களும் உள்ளன.
இக்கண்மாய்களின் தண்ணீர் மூலம் 15 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் அந்தந்த பகுதி குடிநீர் ஆதார பகுதிகளாகவும் இவை உள்ளன.
கண்காணிப்புக்குழு அவசியம்
வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர் திருப்பரங்குன்றம் கண்மாய்களுக்கு நிலையூர் கால்வாய்களில் சென்று நிரம்பும். சமீபத்தில் பெய்த தொடர் மழையால் மானாவாரி கண்மாய்கள் தவிர மற்ற சிறிய கண்மாய்கள் பலவும் நிரம்பி உள்ளன. தென்கால், நிலையூர் பெரிய கண்மாய் பாதி நிரம்பி உள்ளன.
கண்மாய்க்குள் ஆக்கிரமிப்பு ஏற்படாத வகையிலும், ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் அவற்றை உடனுக்குடன் அகற்றவும், நீர் வரத்து கால்வாய்கள், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கன்மாய்கள் தண்ணீரை விவசாயத்திற்கு மட்டும் திறக்கவும், மீதியுள்ள தண்ணீரை பாதுகாப்பதும் மிகவும் அவசியம்.
விவசாயம் இல்லாத காலங்களில் ஆக்கிரமிப்பாளர்கள், மீன் பிடிப்பதற்காக கண்மாய் தண்ணீரை திறந்து விடுவதை தடுக்க வேண்டும். கண்மாய்களுக்கு தண்ணீர் வருவதையும், வெளியேறுவதையும் கண்காணிக்க வேண்டும். கண்மாய் கரைகளில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். ஆண்டு முழுவதும் தண்ணீர் தேக்கி வைக்கவும், நீர் வரத்து கால்வாய்களில் சேதம் ஏற்பட்டால் உடனுக்குடன் சீரமைக்கவும். நடவடிக்கை தேவை.
இதற்கு நீர்வளத் துறை, போலீசார், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், பாசன விவசாய சங்க நிர்வாகிகள் அடங்கிய குழு அமைத்து தினமும் கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் ஆண்டு முழுவதும் சாகுபடி பணிகள் நடக்கும். விவசாயிகள் வாழ்வாதாரம் உயரும். நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படும்.