ADDED : செப் 22, 2024 03:27 AM
மதுரை : தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து, மலைத்தோட்டம்,உணவு, வணிக நிறுவனங்கள், கடைகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆண்டுதோறும் தொழிலாளர் நல நிதி ஒவ்வொருவரின் பங்காக ரூ.20, நிறுவன பங்காக ரூ.40, மொத்தம் ரூ.60 ஐ தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.
இதற்காக lwmis.lwb.tn.gov.in இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. வேலையளிப்போர் நிறுவனங்களை இணையவழியாக பதிவு செய்து தொழிலாளர் நல நிதியை செலுத்தி ரசீது பதிவிறக்கம் செய்யலாம்.
2024க்குரிய தொழிலாளர் நல நிதி, வழங்கப்படாத தொகையை செலுத்தலாம். வாரியத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ள நிறுவனங்களும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இதுவரை தொழிலாளர்நிதி செலுத்தாதவர்கள் நிறுவனம் துவங்கிய ஆண்டிலிருந்து செலுத்த வேண்டும். நிலுவைத் தொகை செலுத்தும் வசதி இணையதளத்தில் உள்ளது என மதுரை மண்டல தொழிலாளர் இணை கமிஷனர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
செப். 24 விழிப்புணர்வு கூட்டம்
2024 ஜூலை 2க்கு பின் 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்திய கடைகள், நிறுவனங்களை இணையவழி வாயிலாக பதிவு, அறிவிப்பு செய்தல் தொடர்பாக செப்.24 மதியம் 3:00 மணிக்கு மதுரை புதுார் தாமரைத் தொட்டி அருகே மண்டல தொழிலாளர் இணை கமிஷனர் அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடக்கிறது.