/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொழிற்சாலைகளுக்கான நில வகைப்பட்டியல்; பெயருக்கு மட்டும் 'மாஸ்டர் பிளானில்' குறிப்பிடுவதா
/
தொழிற்சாலைகளுக்கான நில வகைப்பட்டியல்; பெயருக்கு மட்டும் 'மாஸ்டர் பிளானில்' குறிப்பிடுவதா
தொழிற்சாலைகளுக்கான நில வகைப்பட்டியல்; பெயருக்கு மட்டும் 'மாஸ்டர் பிளானில்' குறிப்பிடுவதா
தொழிற்சாலைகளுக்கான நில வகைப்பட்டியல்; பெயருக்கு மட்டும் 'மாஸ்டர் பிளானில்' குறிப்பிடுவதா
UPDATED : பிப் 17, 2026 07:48 AM
ADDED : பிப் 17, 2026 06:41 AM

மதுரை: மதுரை மாஸ்டர் பிளான் திட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு எந்தெந்த பகுதியில் நிலம் உள்ளதென முழுமையாக தெரியாததால் சிட்கோ தொழிற்பேட்டையை உருவாக்க வேண்டும் என தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.
விவசாயம், வீட்டுமனை, தொழிற்சாலைகளுக்கான திட்டங்கள் உள்ளடக்கிய மதுரை மாஸ்டர் பிளான் திட்டம் (2024 - 44) சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் தொழிற்சாலைகளுக்கான நில வகைப்பாட்டு பட்டியலில் 56 சதுர கி.மீ., பரப்பளவு என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தெந்த பகுதியில் இடம் உள்ளதென குறிப்பிடாததால் எங்களால் இடத்தை தேர்வு செய்ய முடியாத நிலை உள்ளது என்கின்றனர் தொழில்துறையினர்.
அவர்கள் கூறியதாவது: மதுரையில் 1.37 சதவீத அளவுக்கு தொழில்களுக்கான இடவசதி உள்ளது. அதை (50.19 சதுர கி.மீ. பரப்பளவு) 4 சதவீதமாக அதிகரித்தது நல்ல விஷயம் என்றாலும் எந்தெந்த இடத்தில் தொழில் தொடங்க முடியும் என்பது தெரியவில்லை. ஒவ்வொரு இடமாக சென்று தொழில் தொடங்க ஏற்ற இடமா என்பதை கண்காணிக்கவும் முடியாது. மதுரையின் 25 கி.மீ., தொலைவிற்குள் தொழிற்சாலைகள் அமைப்பது குறித்து எந்த கனவும் காணமுடியாது.
நிறுவனங்கள் தனியாக இடம் வாங்கினால் தொழிற்சாலை கட்டுவதற்கு முன்பாக லேஅவுட் அப்ரூவல் தொடங்கி, மாசுகட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத்துறை உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் பெறுவதற்கு குறைந்தது மூன்றாண்டுகளாகிறது. அதன் பின் கட்டடம் கட்டி தொழில் தொடங்க நான்காண்டுகளாகி விடும். அதுவே 400 முதல் 500 ஏக்கர் வரை மொத்தமாக இடத்தை வாங்கி குடிநீர், சாலை, மின்விளக்கு, பாதாள சாக்கடை வசதியை அரசே உருவாக்கி சிட்கோ தொழிற்பேட்டையாக அமைத்தால் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதில் சிரமம் இருக்காது. கட்டடம் கட்டி முடித்தவுடனேயே உற்பத்தியைத் தொடங்கமுடியும்.
'ரெட் கேட்டகிரி' சிட்கோ மதுரையில் மட்டும் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.7000 கோடி அளவிற்கு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், ரப்பர் துறை, ரப்பர் பாகங்கள், ரப்பர் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சிவப்பு (ரெட் கேட்டகிரி) நிற வகைப்பாட்டில் வைத்துள்ளது.
இவற்றுக்கு லைசென்ஸ் பெற்று ஒவ்வொரு இடத்திலும் தனியாக தொழில் தொடங்குவது சிரமம். மதுரையில் 'ரெட் கேட்டகிரி' தொழில்களுக்கு என தனியாக ஒரு தொழிற்பேட்டையை உருவாக்க வேண்டும் என்றனர்.

