ADDED : பிப் 15, 2025 04:17 AM
மேலுார்: திருவாதவூர், புதுப்பட்டியில் மறிச்சுகட்டி கண்மாயை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதால் பரப்பளவு குறைந்து பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இக் கிராமத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் மறிச்சுகட்டி கண்மாய் உள்ளது. இலுப்ப குடிக்கு செல்லும் கால்வாய் 2 வது மடை வழியாக வரும் தண்ணீரால் கண்மாய் நிரம்பி, அதன் மூலம் ஏராளமான ஏக்கர் பயன்பெறும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால், நீர்வளத் துறையினர் அளவீடு செய்து எல்லை கற்களை ஊன்றினர்.
இதில் கரையோரம் உள்ள கல் தவிர்த்து பிற கற்களை அகற்றிவிட்டு கண்மாயை தனிநபர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்கின்றனர்.
அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: நீர்வளத்துறையினர் இப்பகுதிக்கு வராததால் தனிநபர்கள் சிலர் கண்மாயை நிலமாக மாற்றி விவசாயம் செய்கின்றனர். அதனால் கண்மாயின் பரப்பளவு குறைந்து விட்டது.
அதில் அதிக தண்ணீரை சேமிக்க முடியாததால், பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பால் பட்டா நிலங்களுக்கு செல்ல முடியவில்லை.
தற்போது நெல் அறுவடை முடிந்து காலி நிலங்களாக உள்ளது. இவ்வாய்ப்பை பயன்படுத்தி நீர்வளத் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.
நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவ பிரபாகர் கூறுகையில், ''உடனே ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.