தொழிலாளர் பற்றாக்குறையால் அல்லாடும் நில உரிமையாளர்கள்
தொழிலாளர் பற்றாக்குறையால் அல்லாடும் நில உரிமையாளர்கள்
UPDATED : நவ 16, 2026 03:03 AM
ADDED : நவ 15, 2026 06:08 PM

திருப்பரங்குன்றம்: விவசாய பணிகளுக்கு தொழிலாளர் பற்றாக்குறை, கூலி உயர்வு காரணமாக நில உரிமையாளர்கள் அல்லாடுகின்றனர்.
திருப்பங்குன்றம் பகுதி மானாவாரி நிலங்களில் விவசாயிகள் நெல், வாழை, காய்கறிகள் சாகுபடி செய்கின்றனர். இப்பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் மல்லிகை பயிரிடப்பட்டுள்ளது. மழை இல்லாததால் இந்தாண்டு குறைந்தளவிலேயே நெல்நடவு செய்து வருகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது:
முன்ந்தைய காலம் போல விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. பலர் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டப் பணிகளுக்கு சென்று விடுகின்றனர். அங்கு வேலை இல்லாத நாட்களில்தான் இங்கு விவசாயம் பக்கம் வருகின்றனர். பலர் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்கின்றனர். இதனால் நெல் நடவு, களையெடுப்பு, அறுவடை, காய்கறி பறிப்பு, பூ எடுக்க, களைகளை அகற்ற ஆட்கள் கிடைப்பதில்லை. கூலியும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
உரம், பூச்சி மருந்து விலை உயர்ந்து விட்டது. இதனால் லாபம் அரிதாகிறது.
30 வயதுக்குட்பட்டோர் விவசாய பணிக்கு வர தயங்குகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் நிலம் வைத்திருப்போர் குடும்பத்தினரே விவசாய பணிகளில் ஈடுபடுவர். கூலி தொழிலாளிகளை நம்புவோர் விவசாயத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும், என்றனர்.
