/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மகாலில் லேசர் லைட் ஷோ தாமதம்: அமைச்சர் சொன்னது என்னாச்சு
/
மகாலில் லேசர் லைட் ஷோ தாமதம்: அமைச்சர் சொன்னது என்னாச்சு
மகாலில் லேசர் லைட் ஷோ தாமதம்: அமைச்சர் சொன்னது என்னாச்சு
மகாலில் லேசர் லைட் ஷோ தாமதம்: அமைச்சர் சொன்னது என்னாச்சு
ADDED : மே 11, 2025 05:03 AM
மதுரை : மதுரை திருமலை நாயக்கர் மன்னர் மகாலில் மே மாதம் நவீன லேசர் லைட் ஷோ செயல்படும் என அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்த நிலையில் அதற்கான ஒயரிங் பணிகள் இன்னும் துவங்கவில்லை.
மகாலின் முன்புறமுள்ள தர்பார் ஹாலில் திருமலை நாயக்கர் மன்னரின் வாழ்க்கை வரலாறு குறித்த ஒலி ஒளிக்காட்சி ஆண்டு முழுவதும் மாலையில் ஆங்கில, தமிழ் காட்சிகளாக திரையிடப்பட்டது. தர்பார் ஹாலின் தரைத்தளம், பக்கவாட்டு காரிடாரின் தரைத்தளம் சேதமடைந்ததால் பாரம்பரிய முறைப்படி பட்டியல் கற்கள் பதிப்பதற்காக ரூ.3.72 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கியதால் பழைய ஒலி ஒளிக் காட்சிகள் நிறுத்தப்பட்டது.
ஓராண்டை கடந்த நிலையில் தரைத்தளத்தில் பட்டியல் கற்கள், மழைநீர் வடிகால் பட்டியல் கற்கள் அனைத்தும் மாற்றப்பட்டு விட்டது. இங்கு நவீன லேசர் லைட் ஷோ அமைப்பதற்கான ஒயரிங் பணிகள் மட்டும் மூன்று மாதங்களாக கிடப்பில் உள்ளது. இந்நிலையில் மகாலை ஆய்வு செய்வதற்காக மதுரை வந்த அமைச்சர் ராஜேந்திரன், ''மே மாதத்தில் நவீன லேசர் லைட் ஷோ அமைக்கப்பட்டு புதிய வடிவில் மன்னர் வரலாறு தமிழ், ஆங்கில காட்சிகளாக ஒலிபரப்பப்படும்'' என்றார். தற்போது தரைத்தள பணி முடிந்தநிலையில் ஒயரிங் பணிகள் தொடங்கவில்லை.
சிலைகளுக்கு தனிக்கூடம்
மதுரையின் பல்வேறு காலகட்டங்களில் கிடைத்த 180 க்கும் மேற்பட்ட கற்சிலைகள் மகாலின் ஒரு பகுதியில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைக்கப்பட்டு அதில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இங்குள்ள சிலைகளின் பீடங்களை நவீன முறையில் மாற்றியமைத்து கான்கிரீட் மேல்தளம், மின்னொளியுடன் சிலைக்கான தனிக்கூடம் அமைக்கும் பணியும் நடக்கிறது. இதற்கிடையே ரூ.8 கோடி மதிப்பில் நாடகசாலை, பள்ளியறை, நுாலக கட்டடத்தின் உட்புற, வெளிப்புற சுவர்கள், மேல்தள, உட்பகுதி பூச்சு அமைக்கும் பணி பாரம்பரிய முறைப்படி நடக்கிறது. அந்த பணிகளும் இன்னும் நிறைவடையவில்லை. இந்த வேலை நிறைவடைந்த பின் மொத்தமாக ஒயரிங் பணி நடைபெறும் என்றால் லைட் ஷோ துவங்க இன்னும் பல மாதங்களாகும்.
தாமதமின்றி தர்பார் ஹாலுக்கு மட்டும் ஒயரிங் இணைப்பு மேற்கொண்டால் மட்டுமே விரைவில் சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் லைட் ஷோ துவங்க முடியும். ஒயரிங் பணி முடிவதற்குள் சிலைக்கூட பணியும் முடிந்து விட்டால் பார்வையாளர்கள் கூடுதல் பயன்பெறுவர்.