ADDED : நவ 16, 2025 04:21 AM

ப டித்ததோ பல் மருத்துவம். பிடித்ததோ பாடல்கள் பாடுவது... ஒன்றல்ல... இரண்டல்ல... நுாறு படங்களுக்கும் மேல் தமிழ், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பின்னணி பாடல்களை பாடியிருக்கிறார். பிறரும் இசைஞானம் பெற யுடியூப் சேனல், ஆன்லைன் மூலம் லைட் மியூசிக் குறித்து பயிற்சியளித்து வருகிறார். இப்பெருமைகளுக்கு சொந்தக்காரர் பின்னணி பாடகர், பல் அறுவை சிகிச்சை நிபுணர், இசை பயிற்றுனர், நடுவர் என பல பரிமாணங்கள் கொண்டவர் டாக்டர் லாவண்யா.
இவரிடம் இசை பயின்ற இளையதலைமுறையினர் இன்று பல்வேறு ேஷாக்கள், போட்டிகளில் பரிசுகளை தட்டி செல்கின்றனர். சினிமா பாடல்களுக்கான ஸ்வரம் எழுதி தன் சேனலில் வெளியிடுகிறார்.
இனி அவர்...
பிறந்தது, படித்தது, வளர்ந்தது சென்னையில். பல் மருத்துவம் முடித்து அறுவை சிகிச்சை நிபுணராக பணி துவங்கினேன். மூன்று வயதிலேயே பாட்டு வகுப்புகளில் பெற்றோர் சேர்த்து விட்டதால் பாட்டும், இசையும் என்னை பற்றிக்கொண்டன. பிளஸ் 2 படிக்கிற காலத்தில் ஏ.வி.ரமணன் நடத்திய சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சிகளில் பல முறை வெற்றி பெற்றிருக்கிறேன். கச்சேரிகளில் பாட வாய்ப்பு ஏற்பட்டது. பல் மருத்துவம் முடித்து சிகிச்சையையும் அளிக்க துவங்கினேன். ஆனாலும் மனம் இசையிலேயே லயித்தது. பாடல் பாடி ஆல்பமாக வெளியிட்டேன்.
விளம்பர படங்களுக்கு பாடினேன். விஜய் நடித்த தமிழன் படத்தில் இமான் இசையில் பாட வாய்ப்பு வந்தது. விஜய் இன்ட்ரோ பாடல் பாடினேன். லால்லா ேஹா பார்ட்டி என்ற அந்த பாடல் ஹிட்டானது. துள்ளுவதோ இளமை, புதுக்கோட்டையிலிருந்து சரவணன் உள்ளிட்ட நுாறு படங்களில் பாடியிருக்கிறேன். இளையராஜா, ரமேஷ் விநாயகம், இமான், ஹாரிஸ் ஜெயராஜ், ஜி.வி.பிரகாஷ், பரத்வாஜ் இசையில் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பாடியிருக்கிறேன். இளைய ராஜா திருவாசகம் சிம்பொனி இசையமைத்த போது அதில் இணைந்து பாட வாய்ப்பு அளித்ததை மறக்க முடியாது.
இந்நிலையில் தவிர்க்க முடியாத சூழலால் பாட முடியாத நிலை. பல் டாக்டரான கணவர் பிரபுவேணுகோபாலுடன் இணைந்து பல் மருத்துவத்தில் இறங்கினேன். 15 ஆண்டுகளுக்கு பிறகு முன்பு போல பாடும் வாய்ப்பு உருவானதால் கணவர் கொடுத்த ஐடியா படி யூடியூப் சேனல் துவங்கி லைட் மியூசிக் அண்ட் வாய்ஸ் கல்ச்சரல் பயிற்சி அளித்து வருகிறேன். சினிமாவில் பாடுவதை லட்சியமாக கொண்டவர்களுக்கு உதவிடும் வகையில் சினிமா பாடல்களுக்கு ஸ்வரம் எழுதி பாடி சேனலில் வெளியிட்டு வருகிறேன். இதுவரை 275 பாடல்களுக்கு ஸ்வரம் வெளியிட்டது வரவேற்பை பெற்றிருக்கிறது.
நன்றாக பாட வேண்டும் என விரும்புவோர் அதை பார்த்து பாடல்களை சரியாக ராகத்துடன் பாடி சந்தோஷமடைகின்றனர். ஒரு நாதஸ்வர வித்வான் குல தெய்வம் போல பாடல்கள் பாட எந்த எதிர்பார்ப்பும் இன்றி இலவசமாக ஸ்வரம் வெளியிட்டு வருகிறீர்கள் என பாராட்டியதை நினைத்தால் நெகிழ்ச்சியாக இருக்கிறது.
சென்னையில் ஸ்டூடியோ துவங்கி ஆன்லைன் லைட் மியூசிக், வாய்ஸ் கல்ச்சரல் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறேன். உலகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கானோர் இணைந்துள்ளனர். தனியார் டிவியில் சரிகமப போட்டி ட்ரெயினராக பணிபுரிகிறேன். முறையாக இசை பயின்று பாடகராக வேண்டும் என எண்ணத்துடன் வருவோருக்கு பயிற்சியளித்து வெற்றி பெற வைப்பதை தான் முதல் வேலையாக கொண்டுள்ளேன் என்றார்.

