/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நுாலகம் - கல்லுாரி இடையே ஒப்பந்தம்
/
நுாலகம் - கல்லுாரி இடையே ஒப்பந்தம்
ADDED : மே 29, 2025 01:55 AM
மதுரை: மதுரை லேடி டோக் கல்லுாரி, கலைஞர் நுாற்றாண்டு நுாலகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் இரு தரப்பினரிடையே திறன் அடிப்படையிலான கற்றலை வளர்க்க முடிவு செய்யப்பட்டது.
நுாலகம் சார்பில் தலைமை நுாலகர் தினேஷ் குமார், கல்லுாரி சார்பில் முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ ஒப்பந்தங்களை பறிமாறினர். துணைத் தலைமை நுாலகர் சந்தானகிருஷ்ணன், நுாலகர் ஜெபஜோஸ்லின், பேராசிரியர்கள் ஜெசி ரஞ்சிதா ஜெபசெல்வி, நிசி காருண்யா உடனிருந்தனர்.
மாணவர்களுக்கான பணியாற்றும் அனுபவ பயிற்சி, போட்டி தேர்வுகளுக்கான ஊக்க முகாம்கள், தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள், இலக்கியச் செயல்பாடுகள், பன்னாட்டு புத்தகக் கண்காட்சி, இளைஞர் இலக்கியத் திருவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பு, கல்லுாரி நிகழ்வுகளுக்காக நுாலக அரங்குகளை சலுகையாக வழங்குதல் உள்ளிட்டவை இந்த ஒப்பந்தம் மூலம் வழங்கப்படுகிறது.
தலைமை நுாலகர் தினேஷ் குமார் கூறியதாவது: கல்லுாரி அடையாள அட்டை, கலைஞர் நுாலக உறுப்பினர் அட்டையை பயன்படுத்தி நுாலக புத்தகங்களை அபராதத் தொகையின்றி 60 நாட்களுக்கு மாணவர்கள் பயன்படுத்தலாம்.
மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கம் மேம்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மாணவர்கள், பேராசிரியர்கள் இணைந்து வாசகர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி, குழந்தைகளுக்கு கதை சொல்லுதல், பார்வையற்ற மாணவர்களுக்கான உரைகளை ஆடியோ வடிவில் மாற்றி வழங்குதல் உட்பட பல சேவைகளை வழங்க உள்ளனர். இதுபோன்ற ஒப்பந்தம் மேலும் பல கல்லுாரிகளுக்கிடையே மேற்கொள்ளப்படும், என்றார்.