/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் இருந்து ராணுவ அதிகாரிகள் உருவாக வேண்டும்; லெப்டினன்ட் கர்னல் சுரேஷ் எதிர்பார்ப்பு
/
மதுரையில் இருந்து ராணுவ அதிகாரிகள் உருவாக வேண்டும்; லெப்டினன்ட் கர்னல் சுரேஷ் எதிர்பார்ப்பு
மதுரையில் இருந்து ராணுவ அதிகாரிகள் உருவாக வேண்டும்; லெப்டினன்ட் கர்னல் சுரேஷ் எதிர்பார்ப்பு
மதுரையில் இருந்து ராணுவ அதிகாரிகள் உருவாக வேண்டும்; லெப்டினன்ட் கர்னல் சுரேஷ் எதிர்பார்ப்பு
ADDED : மே 13, 2025 12:48 AM

மதுரை: ''மதுரையில் இருந்து ராணுவ வீரர்கள் நிறையபேர் பணிபுரிகின்றனர். பள்ளி, கல்லுாரிப் பருவத்திலேயே விளையாட்டு, தலைமைத்துவ திறமையை வளர்த்துக் கொண்டால் ராணுவ அதிகாரியாக உருவாகலாம்,'' என்று மதுரையைச் சேர்ந்த தற்போது மணிப்பூர் லிமகாங்கில் பணியாற்றும் லெப்டினன்ட் கர்னல் சுரேஷ் தெரிவித்தார்.
அம்மா பசும்பொன், அப்பா பாண்டி மில் தொழிலாளி. தம்பி கார்த்திக் ராணுவ வீரராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். மதுரை திருமங்கலம் சாத்தங்குடி கிராமத்தில் பிறந்த சுரேஷ் பள்ளி, கல்லுாரியில் டிப்ளமோ படிக்கும் போதே தடகளம், வாலிபால் விளையாட்டிலும் என்.சி.,சி., யிலும் சிறந்த மாணவராக விளங்கினார். அதில் கிடைத்த அனுபவங்கள் ராணுவத்தில் வீரராக சேர வைத்து இன்று லெப்டினன்ட் கர்னல் அளவிற்கு தன்னை உயர்த்தியுள்ளது என்கிறார் சுரேஷ். தற்போது மணிப்பூரில் ராணுவப்பணியில் இருக்கும் சுரேஷ், மதுரையில் இருந்து நிறைய ராணுவ வீரர்கள் உருவாகின்றனர். ஆனால் அதிகாரியாவதை லட்சியமாக கொள்ள வேண்டும் என்றார்.
அவர் கூறியதாவது: படிப்பிலும் முதல் மாணவராகவே இருந்தேன். கராத்தே பிளாக் பெல்ட் தகுதி பெற்றேன். டிப்ளமோ படிக்கும் போது 2004 ல் டேராடூனில் நடந்த தேசிய அளவிலான என்.சி.சி., மலையேறும் பயிற்சியில் தமிழக அணித்தலைவராக பங்கேற்றேன். அதே ஆண்டில் சேலத்தில் நடந்த ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் நர்சிங் அசிஸ்டென்ட் பணியில் சேர்ந்தேன். ஐந்து ஆண்டு நிறைவடைந்தால் ராணுவ அதிகாரி தேர்வில் பங்கேற்கலாம். அலகாபாத்தில் நடந்த அதிகாரிகள் தேர்வு மையத்தில் (எஸ்.எஸ்.பி.,) ஏ.எம்.சி., எனப்படும் மருத்துவப் பிரிவில் 6000 பேர் பங்கேற்றோம். அதில் 20 பேரில் ஒருவராக தேர்வானேன்.
லக்னோவில் நடந்த ராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய பயிற்சியில் சிறந்த அதிகாரியாகவும் ட்ரில் போட்டியில் முதலிடம் பெற்றதோடு அணிவகுப்பை வழிநடத்தும் 'பரேடு கமாண்டர்' ஆகவும் பொறுப்பேற்றேன். அடுத்தடுத்து உத்தரபிரதேசத்தில் பரேலி, ராஜஸ்தானில் சூரத்கர், மேற்கு வங்கத்தில் கோல்கட்டா, பஞ்சாப்பில் பெரோஷ்பூர், தமிழ்நாட்டில் ஊட்டி வெலிங்டனில் பணியாற்றி லெப்டினன்ட், கேப்டன், மேஜர் பதவிகளை வகித்து தற்போது மணிப்பூரில் (லிமகாங்க்) லெப்டினன்ட் கர்னலாக மெடிக்கல் பட்டாலியனில் மருத்துவ அதிகாரியாக உள்ளேன்.
அகாடமி துவங்க திட்டம்
மதுரை மட்டுமல்ல தென்மாவட்ட வீரர்களுக்கு அதிக திறமை உள்ளது. அதை வெளிப்படுத்த தெரியாததால் ராணுவ வீரராகவே பணியாற்றி ஓய்வு பெறுகின்றனர். ஒவ்வொரு பிரிவுக்கு ஏற்ப 2 முதல் 5 ஆண்டு பணி அனுபவத்தில் அதிகாரியாக தேர்வில் பங்கேற்கும் வாய்ப்புள்ளது. பணி ஓய்வுக்கு பின் மதுரையில் இருந்து ராணுவ அதிகாரிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளேன் என்றார்.