ADDED : அக் 03, 2025 01:28 AM

திருமங்கலம்: திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் உள்ள கூட்டுறவு சங்கத்திற்கு தர்மபுரியில் இருந்து நெல்மூடைகளை ஏற்றிக்கொண்டு கர்நாடகா பதிவு எண் கொண்ட லாரி வந்தது. லாரியை தர்மபுரி மணிகண்டன் ஓட்டி வந்தார். கூட்டுறவு சங்கத்திற்கு வந்த பின்னர் நிர்வாகிகள் லாரியை எடை போட்டு வருமாறு அனுப்பி உள்ளனர்.
எடை போடுவதற்காக விமான நிலைய ரோட்டில் உள்ள ரயில்வே கிராசிங்கை லாரி கடக்க முயன்றது. லாரியில் உயரமாக நெல்முறைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ரயில்வே தண்டவாளத்திற்கு மேல் ரயில்களுக்கு மின்சாரம் வழங்கும் கம்பிகள் மீது வாகனங்கள் உரசி விடாமல் இருப்பதற்காக கிராசிங்கில் இருபுறமும் உயர கட்டுப்பாட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கும்.
இதில் ஒருபுற தடுப்பு, தண்டவாளத்தை லாரி கடந்து மற்றொரு புறத்தில் உள்ள தடுப்பை கடக்க முயன்றது. இந்தத் தடுப்பு உயரம் குறைவாக இருந்ததால் லாரியின் மேல் பகுதி மோதியது.
இதில் தடுப்பு தரையில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்டு லாரி மீதே தொங்கியது.
லாரி தண்டவாளத்தை கடந்து கேட்டையும் கடந்து இருந்ததால் ரயில் செல்வதில் பாதிப்பு ஏற்படவில்லை. அந்த பகுதியில் பாலம் வேலைகள் நடப்பதால் குறுகலான பாதையே வாகனங்களுக்கு போகவர பயன்படுகிறது.
இந்த இடத்தில் லாரி வழிமறித்து நின்றதால் அந்த ரோட்டில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. கிரேன் உதவியோடு லாரி மீட்கப்பட்டபின், போக்குவரத்து சீரானது.