/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கல்லுாரிகள், தொழில் நிறுவனங்களுக்கான இடைவெளியை குறைக்க வேண்டும் மடீட்சியா பிரதிநிதிகள் கருத்து
/
கல்லுாரிகள், தொழில் நிறுவனங்களுக்கான இடைவெளியை குறைக்க வேண்டும் மடீட்சியா பிரதிநிதிகள் கருத்து
கல்லுாரிகள், தொழில் நிறுவனங்களுக்கான இடைவெளியை குறைக்க வேண்டும் மடீட்சியா பிரதிநிதிகள் கருத்து
கல்லுாரிகள், தொழில் நிறுவனங்களுக்கான இடைவெளியை குறைக்க வேண்டும் மடீட்சியா பிரதிநிதிகள் கருத்து
ADDED : ஜன 18, 2024 07:51 AM
மதுரை : கல்லுாரிகளுக்கும் தொழில் நிறுவனங்களுக்குமான இடைவெளியை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதுரை மடீட்சியா தொழில் அமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
மடீட்சியா சங்க நிர்வாகிகள் லட்சுமிநாராயணன், சம்பத், சந்திரசேகர், குணமாலை கூறியதாவது:
தொழில் நிறுவனங்கள் அல்லது தொழிற்சங்கங்களுடன் கல்லுாரிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தால் பல்கலை மானியக்குழுவின் நாக் கமிட்டி ஆய்வின் போது மதிப்பெண் வழங்கப்படுகிறது.
சில கல்லுாரிகள் இதற்காக மட்டும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து மதிப்பெண் பெறுகின்றனர். எத்தனை தொழில் நிறுவனங்களுக்கு மாணவர்கள் அனுப்பப்பட்டனர், எத்தனை நிறுவனங்களின் பிரச்னைகளுக்கு மாணவர்கள் தீர்வு கண்டனர் என்பதை நாக் கமிட்டி கேட்பதில்லை. இதை அடிப்படையாக வைத்து நாக் கமிட்டி மதிப்பெண் வழங்க வேண்டும்.
இந்த நடைமுறை வந்தால் தான் தொழில் நிறுவனங்களுக்கு மாணவர்கள் கிடைப்பர். சில கல்லுாரிகளில் மட்டும் மாணவர்களை தொழில் நிறுவனங்களுக்கு அனுப்புகின்றனர்.
ஒரு சில கல்லுாரிகள் பெயருக்கு 10 நாட்கள் தொழிற்சாலை விசிட் அனுப்புவதால் மாணவர்களுக்கும் பயனில்லை, நிறுவனங்களுக்கும் பயனில்லை.
மாணவர்கள் தொழில் நிறுவனங்களுக்கு வந்து 'ப்ராஜக்ட்' செய்தால் தான் தொழில் நிறுவனங்களைப் பற்றிய புரிதல் வரும். மற்ற நாடுகளில் கல்லுாரி இறுதியாண்டில் 3 முதல் 6 மாதங்கள் நிறுவனங்களில் வேலை செய்ய வேண்டும் என்ற உத்தரவு உள்ளது.
இப்படிச் செய்தால் நிறுவனங்களில் வேலையாட்கள் பற்றாக்குறை பிரச்னையும் தீரும். தொழில் நிறுவனங்கள் என்றால் என்னவென்று மாணவர்களும் புரிந்து கொள்வர்.
தமிழக அரசு 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் இதை முயற்சி செய்கின்றனர். ஆனால் கல்லுாரிகளுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் உடனடி தீர்வாக அமையவில்லை.
முன்பெல்லாம் எட்டாம் வகுப்பிலேயே 'கிராப்ட்' பாடத்திட்டம் நடத்தப்பட்டது. அதுபோன்று தொழில்முனைவோருக்கான பாடத்திட்டம் கொண்டு வரவேண்டும். அப்போது தான் டாக்டர், இன்ஜினியரிங் போன்று பிளஸ் 2 படிக்கும் போதே என்னவாக வேண்டும் என்ற சிந்தனை மாணவர்களிடம் உருவாகி டிகிரி படித்தவுடன் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.
கலை, அறிவியல் துறை மாணவர்களுக்கு இறுதியாண்டில் தொழிற்சாலையில் 3 முதல் 6 மாத கால 'இன்டர்ன்ஷிப்' முறையை கொண்டு வரவேண்டும். கல்லுாரி முடித்தவுடன் மாணவர்களின் உடனடி தேவை வேலைவாய்ப்பு தான்.
எனவே கல்லுாரிகளுக்கும் தொழில் நிறுவனங்களுக்குமான இடைவெளியை குறைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் புதிய திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றனர்.