UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 06:17 PM
‘சிக்மா’ படம் பார்க்க வந்த சங்கீதா
முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படம் நேற்று ரிலீசானது. தனது மகன் இயக்கிய முதல் படத்தை பார்க்க லண்டனில் இருந்து சென்னை வந்த தாய் சங்கீதா, தங்கை திவ்யா சாஷா இருவரும் அங்குள்ள தியேட்டரில் படத்தை பார்த்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகின.
செழியனின் ‘காகிதமலர்’
தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர், இயக்குனர் செழியன் 57, சமீபத்தில் காலமானார். இறப்பதற்கு முன் அவர் ஒளிப்பதிவு செய்து இயக்கிய ‘காகிதமலர்’ திரைப்படம் 39வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் ‘ஆசியன் பியூச்சர்’ பிரிவில் திரையிடவும், போட்டிப் பிரிவிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வித்யா பாலன் நடிப்பில்
தமிழ் படம் இயக்கும் பால்கி
ஹிந்தியில் ‘சீனி கம், பா, ஷமிதாப்’ படங்களை இயக்கியவர் ஆர்.பால்கி. இவர் முதன்முறையாக தமிழில் ஒரு படம் இயக்க உள்ளார். அதில் ஹிந்தி நடிகை வித்யா பாலன் நாயகியாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே பால்கியின் ‘பா’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். நடிகர் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் அறிவிக்க உள்ளனர். வித்யாபாலன் தற்போது ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தில் வில்லியாக நடித்துள்ளார்.
மோகன்லால் பற்றி பாக்யஸ்ரீ போர்ஸ்
தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், தமிழில் சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’, மலையாளத்தில் மோகன்லாலின் ‘ஆபரேஷன் கங்கா’ படங்களில் நடித்து வருகிறார். இதில் விஷ்ணு மோகன் இயக்கத்தில் ராணுவ பின்னணியில் உருவாகும் ஆபரேஷன் கங்கா படம் பற்றி பேசிய பாக்யஸ்ரீ, ‘‘மோகன்லால் உடன் நடிப்பது வரம். ஒவ்வொரு நாளும் அவரின் கண்கள் வழியே சினிமாவை பார்க்கவும், அவரிடம் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது. உண்மையில் அற்புதமான கலைஞர்’’ என்றார்.
நவ.,20ல் ‘சத்தியவான் சாவித்திரி’ ரிலீஸ்
இயக்குனர் மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் படம், ‘சத்தியவான் சாவித்திரி’. பிரவீன் எஸ் விஜய் இயக்கும் இப்படத்தில் இருவரும் வழக்கறிஞர்களாக நடித்துள்ளனர். ஜூலை மாதம் ரிலீஸ் என அறிவித்து ஒத்திவைத்த நிலையில், நவ.20ல் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அக்.11ல் இளையராஜா
இசை ஆராய்ச்சி மையம் திறப்பு
சென்னை ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘இசைஞானி இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை’ பிரதமர் மோடி அக்.11ல் திறந்து வைக்கிறார். சென்னையில் பூந்தமல்லி – வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி, அத்துடன் இம்மையத்தையும் திறந்துவைக்கிறார். இந்த ஆராய்ச்சி மையம் இளையராஜாவின் இசை நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
‘ஜெயிலர் 2’ சான்றிதழ்
ரஜினியின் விருப்பம்
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினி நடித்துள்ள 'ஜெயிலர் 2' படம் அக்.15ல் ரிலீசாகிறது. இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் தவிர்த்து ‘யுஏ’ சான்றிதழாவது பெற வேண்டும் என ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளாராம். அவர் கடைசியாக நடித்த ‘கூலி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டதால் 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் படம் பார்க்க முடியாமல் போனது. இதனால், ‘ஜெயிலர் 2’ படத்தில் ஏ சான்றிதழ் கிடைக்கும் வகையிலான காட்சிகள் வேண்டாம் என ரஜினி அறிவுறுத்தினாராம். விரைவில் இப்படம் சென்சார் செல்கிறது.
