UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 05:56 PM
நஸ்ரியா தான் என் ரங்கா: பஹத் பாசில்
நடிகர் பஹத் பாசில் மலையாளத்தில் ‘ஆவேசம்’ படத்தில் ரங்கா கேரக்டரில் நடித்திருந்தார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் ‘‘ரங்கா கேரக்டர் லுக் டெஸ்ட் எடுக்கும்போது வெள்ளை நிற உடை, மோதிரங்கள், நகைகள் அணிந்திருந்தேன். அது அனைத்துமே மனைவி நஸ்ரியாவின் நகைகள். அதனாலேயே அவருக்கும் என் கேரக்டர் பிடித்துவிட்டது. அவர் தான் என் ரங்கா; நான் அவருடைய அம்பன் (படத்தில் தீவிர விசுவாசி, உதவியாளர் கேரக்டர் பெயர் அம்பன்)’’ என்றார்.
'மாத்ருபூமி'க்கு மத்திய அரசு அனுமதி
கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய– சீன ராணுவ வீரர்கள் மோதலை அடிப்படையாக வைத்து ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் ‘மாத்ருபூமி’ படம் உருவாகியுள்ளது. ராணுவ படம் என்பதால் மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்குத் திரையிட்டபோது ஆட்சேபகரமான காட்சிகளை மாற்ற அறிவுறுத்தினர். அதன்படி, மீண்டும் படப்பிடிப்பு நடத்தி சில காட்சிகளை மாற்றியதை அடுத்து தற்போது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், இப்படத்திற்குத் தேவையான தடையில்லா சான்றிதழை வழங்கியுள்ளது. அடுத்து தணிக்கை வாரியமும் அனுமதித்தால் நவ.,13ல் படம் வெளியாகலாம்.
எதிர்பார்க்கும் சாய் பல்லவி
நடிகை சாய் பல்லவி, தமிழில் கடந்த 8 ஆண்டுகளில் 5 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தற்போது தமிழில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்முட்டி நடித்த ‘ஓம்’ (நவ.,20ல் ரிலீஸ்), ஹிந்தியில் ரன்பீர் கபூரின் ‘ராமாயணா’ (நவ.,6ல் ரிலீஸ்) படங்களில் நடித்துள்ளார். இந்த இரு படங்களும் தமிழ், ஹிந்தி என பான் இந்திய மொழிகளில் ரிலீசாவதால் மீண்டும் தமிழில் மார்க்கெட்டை பிடிக்கலாம் என எதிர்பார்க்கிறார். அடுத்து மணிரத்னம் இயக்கும் ‘இஞ்சி வெல்லம்’ படத்தில் நடித்து வருகிறார்.
‘ராக்கா’வில் நடிக்கவில்லை: ஐஸ்வர்யா லட்சுமி
‘கட்டா குஸ்தி 2’ வெற்றிக்கு பிறகு தற்போது மலையாளம், தெலுங்கில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் ‘ராக்கா’ படத்தில் வில்லியாக நடிப்பதாக செய்தி வெளியானது. இதனை மறுத்த ஐஸ்வர்யா லட்சுமி, ‘‘ராக்கா படத்தில் நான் நடிக்கவில்லை. அப்படக்குழுவில் இருந்து என்னை யாரும் அழைக்கவில்லை. யாராவது தயவுசெய்து என்னை அப்படத்தில் நடிக்க வையுங்கள்’’ கிண்டலாக கூறியுள்ளார்.
என்னை செதுக்கிய
பலரில் ஒருவர்: கமல் அஞ்சலி
இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் வயது மூப்பால் காலமானார். அவருக்கு வயது 95. சென்னையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் கமல், ‘‘இளமையில் மரணம் கொடியது. சிங்கீதம் இளமையில் மாண்டுவிட்டார் என்றுதான் சொல்வேன். அவர் உடலுக்குதான் வயது அதிகம். மனசு இளமையானது. எல்லோருக்கும் மிகச்சிறந்த உதாரணம் அவர். என் வாழ்க்கையில் என்னை செதுக்கிய பலரில் இவரும் ஒருவர்’’ என்றார்.
குழந்தை பற்றி ஓபனாக
பேசிய வரலட்சுமி
நடிகை வரலட்சுமி சரத்குமார் 2024ல் மும்பையை சேர்ந்த நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்தார். அவருக்கு வரலட்சுமி 2வது மனைவி. குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து பேசிய வரலட்சுமி, ‘‘நாங்கள் குழந்தைகளை பெற முடியாததால், தெளிவாகச் சிந்தித்து சுயமாகவே குழந்தை வேண்டாம் என முடிவு செய்தேன். குழந்தை பெற்றெடுப்பதை விட அவர்களை சரியாக வளர்ப்பதே பெற்றோரின் உண்மையான கடமை. நிக்கோலாயின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த மகளை என் சொந்த மகளாக கருதுகிறேன்’’ என்றார்.
ரூ.95 கோடி வசூலித்த
ஹிந்தி ‘திரிஷ்யம் 3’
மலையாளத்தில் மோகன்லால் நடித்து ஹிட்டான ‘திரிஷ்யம் 3’ படம் ஹிந்தியில் அபிஷேக் பதக் இயக்கத்தில் ‘திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ படமாக ரீமேக் ஆனது. அஜய் தேவ்கன் நாயகனாக நடித்திருந்தார். அக்.2ல் ரிலீசான இப்படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.80 கோடியும், வெளிநாடுகளில் ரூ.15 கோடியும் வசூலித்துள்ளது. முதல்நாளில் அதிகம் வசூலித்த ஹிந்தி படங்களில் ‘துரந்தர் 2’ படத்திற்கு அடுத்து 2வது இடத்தை பிடித்துள்ளது.
