UPDATED : அக் 07, 2026 06:33 PM
ADDED : அக் 07, 2026 05:56 PM
‘ஜெயிலர்’ 2க்கு ‛யுஏ’ சான்றிதழ் : ரஜினி ‛ஹேப்பி’
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ படம் அக்., 15ல் வெளியாகிறது. ரஜினியின் முந்தைய படமான ‛கூலி’-க்கு ‛ஏ’ சான்றிதழ் கிடைத்ததால் குடும்பத்தினருடன் குறிப்பாக குழந்தைகளுடன் அதை பார்க்க முடியவில்லை. இதனால் இந்த படத்தில் வன்முறையை குறைத்து ‛யுஏ’ சான்றிதழ் பெற வேண்டும் என ரஜினி படக்குழுவிற்கு அறிவுறுத்தியிருந்தார். அதன்படி படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதன் காரணமாக ரஜினி மகிழ்ச்சியில் உள்ளார். படமும் 2 மணிநேரம் 45 நிமிடம் கால அளவில் உள்ளது.
தடகள வீராங்கனை வித்யாவை பாராட்டிய தனுஷ்
கோவையை சேர்ந்த வித்யா ராம்ராஜ் தடகள போட்டியில் சர்வதேச அளவில் சாதனை படைத்து வருகிறார். நடந்து முடிந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 3 பதக்கங்களை வென்று சாதித்தார். அதோடு பி.டி.உஷாவின் 42 ஆண்டுகால தேசிய சாதனையையும் முறியடித்தார். முதல்வர் விஜய், அமைச்சர்கள் பாராட்டினர். இப்போது நடிகர் தனுஷும் இவரை நேரில் அழைத்து பாராட்டி கவுரவித்துள்ளார்.
‘ஒடிசி’-யை விட டோரதி சிறந்த படம் - மிஷ்கின்
சென்னையில் நடந்த டோரதி பட சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மிஷ்கின், ‘‘என் வாழ்வில் 30 ஆண்டுகளில் பார்த்த சிறந்த படங்கள் கடைசி விவசாயி, கொட்டுக்காளி, டோரதி. இந்த படங்களுக்கு பின்னர்தான் என் படங்கள் உள்ளிட்ட மற்ற படங்கள். இதை மணிரத்னத்திடமும் சொன்னேன். அப்போது அங்கிருந்த லிங்குசாமி என்னை அடிக்க வந்தார். டோரதியில் சிறப்பாக நடித்த ரிஷிகாந்த், சனத் கால்களில் நான் விழ வேண்டும். சபை நாகரிகத்தின் காரணமாக என்னுடைய மோதிரத்தை பரிசளிக்கிறேன். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கடைசியில் எடுத்த படம் (ரெட்ரோ) மொக்கை. இது அற்புதமான படம். கிறிஸ்டோபர் நோலனின் ஒடிசி-யை விட டோரதி சிறந்த படம்’’ என்றார்.
தயாரிப்பு நிறுவனம் துவங்கிய சிபிராஜ்
நடிகர் சிபிராஜ் தனது பிறந்தநாளில் அண்டர்டாக் பிலிம்ஸ் எனும் புதிய தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். முதல் தயாரிப்பில் அவரே ஹீரோவாக நடிக்கிறார். இதை ஈஷ்வர் கார்த்திக் இயக்குகிறார். படத்தின் கதை, பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
அன்பில் அவன் - பிரீத்தி முகுந்தன் நெகிழ்ச்சி
அசோக் செல்வன் நடிப்பில் கடந்தவாரம் வெளியான ‛அன்பில் அவன்’ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய நாயகி பிரீத்தி முகுந்தன், ‛‛இந்த படத்தை முதன்முதலில் பார்த்த அனுபவம் உணர்ச்சிகரமானது. எனக்கு ஏற்பட்ட பதற்றத்தால் படத்தை தியேட்டரில் அமர்ந்து பார்க்க முடியவில்லை. ஒன்றரை மணி நேரம் தியேட்டர் பக்கவாட்டு படிக்கட்டில் நின்றபடி பார்த்தேன். அப்போது கண்களில் கண்ணீர் வந்தது. ஒரு நடிகையாக இந்த படத்தில் நடித்தது ஒரு வரம். எதிர்காலத்தில் இதில் நடித்ததற்காக பெருமைப்படுவேன்’’ என்றார்.
இது மாதிரியான படங்கள் வரணும் : அட்லி
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘பத்தா’ படத்தை இயக்குனர் அட்லி தயாரித்திருந்தார். மதுரையில் தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்தபின் அட்லி அளித்த பேட்டியில், ‘‘பாராசைட், ஆவேசம், மஞ்சும்மேல் பாய்ஸ்’ போன்ற படங்களை பார்க்கும்போது இது போன்று ஏன் நம்ம ஊரில் எடுப்பதில்லை என்று யோசிப்பேன். அந்த மாதிரியான படங்களை நம்ம ஊரில் தயாரிப்பாளர்கள் எடுத்து செய்வதற்கு ‘பத்தா’ ஒரு சிறந்த வாய்ப்பு’’ என்றார். மதுரையை சேர்ந்த வளர்ந்து வரும் துணை நடிகர் சங்கர் படக்குழுவினருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
