இயக்குனர் ஆசையில் காஜல் அகர்வால்
திருமணம், குழந்தை பிறப்புக்கு பிறகு காஜல் அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன. கடைசியாக ஹிந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியான 'சிக்கந்தர்' படத்தில் நடித்தார். அப்படம் தோல்வியடைந்தது. இந்நிலையில் காஜல் அகர்வால், விரைவில் ஒரு படத்தை தயாரித்து, இயக்க திட்டமிட்டுள்ளாராம். எந்த இயக்குனரிடமும் உதவியாளராகவோ, பயிற்சியோ எடுத்திராத காஜல், படம் இயக்கி வெற்றி காண்பாரா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
செல்வத்தைத் தருவாரா 'குபேரா'
செல்வத்தின் கடவுகளாக இருக்கும் குபேரன் பெயரிலேயே தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா நடிக்க 'குபேரா' படம் தயாராகி உள்ளது. தமிழ், தெலுங்கில் உருவாகி உள்ள இதை சேகர் கம்முலா இயக்க, ஜுன் 20ல் ரிலீஸாகிறது. தமிழில் கடந்த ஐந்து மாதங்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் எதிர்பார்த்த வசூலை தராமல் ஏமாற்றின. அதேசமயம் சின்ன பட்ஜெட் படங்கள் வசூலில் பட்டையை கிளப்பின. இந்நிலையில் முன்னணி நடிகரான தனுஷின் படம் வெளியாக உள்ளது. இந்த படமாவது பெயருக்கு ஏற்றார்போல் வசூல் எனும் செல்வத்தை அள்ளி தருமா என திரையுலகினர் எதிர்பார்த்துள்ளனர்.
ஜூலை 4ல் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' ரிலீஸ்
நடிகை வனிதா விஜயகுமார் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தை இயக்கி நடித்துள்ளார். அவரது மகள் ஜோவிகா தயாரித்துள்ளார். இப்படத்தை மறைந்த நடிகையான தனது தாயார் மஞ்சுளாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 4ல் ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளார் வனிதா. இதற்கான ரிலீஸ் தேதி போஸ்டரை நடிகர் ரஜினி வெளியிட்டுள்ளார்.
இறங்குமுகத்தில் 'தக்லைப்' வசூல்
கமல், சிம்பு, திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ் என பலரும் நடித்துள்ள 'தக் லைப்' படம் மோசமான திரைக்கதையால் முதல் நாளில் இருந்தே வசூலில் தள்ளாடி வருகிறது. முதல் நாளில் ரூ.17 கோடி வசூலித்த இப்படம், 2வது நாளில் 7.15 கோடி, மூன்றாவது நாளில் 7.75 கோடி, நான்காவது நாளில் 6.5 கோடி வசூலித்த நிலையில், 5வது நாளில் வெறும் 3.25 கோடியே வசூலித்துள்ளது. அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 5 நாளில் 40 கோடியே வசூலித்திருப்பது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கமல் நடித்து கடைசியாக வெளியான 'இந்தியன் 2' வசூலை விட குறைவு.
7 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் விஜய் யேசுதாஸ்
பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். இவரும் தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். தனுஷ் நடித்த 'மாரி' உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் இருக்கிறார். கடந்த 7 ஆண்டுகளாக படம் நடிக்காத விஜய் யேசுதாஸ், தற்போது ராம் இயக்கத்தில் 'பறந்து போ' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கும் இதில் அவரது நண்பராக நடித்துள்ளார்.
'அகண்டா 2' செப்., 25ல் ரிலீஸ்
போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் 2021ல் வெளியாகி, வரவேற்பை பெற்ற தெலுங்கு படம் 'அகண்டா'. இதே கூட்டணியில் 'அகண்டா 2' படம் உருவாகிறது. பாலகிருஷ்ணாவுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் படத்தின் அறிமுக டீசரை வெளியிட்டுள்ளனர். அதில் சிவன் தோற்றத்தில் பாலகிருஷ்ணா எதிரிகளை பந்தாடும் ஆக் ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. செப்., 25ல் இப்படம் தெலுங்கு, தமிழில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமன்னா நடிக்கும் 'விவான்' படப்பிடிப்பு துவக்கம்
தெலுங்கில் 'ஒடேலா 2' படத்தில் நடித்த தமன்னா, ஹிந்தியில் 'ரெய்டு 2' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். தற்போது 'விவான்' உள்ளிட்ட 3 ஹிந்தி படங்களில் கமிட் ஆகியுள்ளார். இதில் விவான் படத்தில் சித்தார்த் மல்கோத்ராவுக்கு ஜோடியாக நடிக்கிறார். அடுத்தாண்டு மே 15ல் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட இதன் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளதாக தமன்னா தெரிவித்துள்ளார்.